நிதி மோசடி: வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதாவுக்கு மற்றொரு வழக்கில் 7 ஆண்டு சிறை

டாக்கா:

பிரதமராக இருந்தபோது நிதி மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டில்,  வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு கூறி உள்ளது.

ஏற்கனவே ஊழல் வழக்கு ஒன்றில் அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது மற்றொரு முறைகேடு வழக்கில் அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

வங்கதேச முன்னாள் பிரதமரான கலிதா ஜியா, தனது ஆட்சிக் காலத்தின்போது அவரது மறைந்த கணவர் ஜியாவுர் ரஹ்மான் பெயரால் இயங்கிவரும் அறக்கட்டளைக்காக வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக சுமார் 2.5 லட்சம் அமெரிக்க டாலர்கள் நன்கொடை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தனது கணவரின் பெயரிலான அறக்கட்டளைக்கு நிதி சேர்த்ததாக கலிதா ஜியா மீது டாக்கா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

கலிதா ஜியா, அவரது ஆட்சிக்காலத்தில் அரசியல் செயலாளராக இருந்த ஹாரிஸ் சவுத்தரி, ஹாரிஸ் சவுத்தரியின் தனி உதவியாளர் ஜியாவுல் இஸ்லாம் முன்னா மற்றும் டாக்கா நகர முன்னாள் மேயர் சாதிக் உசேன் கோக்கா ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவர்களுக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை  விதிக்கப்படுவதாகவும்  நீதிபதி அத்தருஜாமான்  உத்தரவிட்டார்.

கலிதா ஜியா மீது மேலும் 34 வழக்குகள் நிலுவையில்  இருப்பது குறிப்பிடத்தக்கது.