பும்ரா ஹாட்ரிக் விக்கெட் எடுத்ததற்கு விராத் கோலி காரணமா?

ஐமைக்கா: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில், இந்திய வீரர் பும்ரா, ஹாட்ரிக் விக்கெட் எடுத்ததில், கேப்டன் விராத் கோலி முக்கியப் பங்கு வகித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணி, இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவிடம் சிக்கி சின்னாபின்னமானது. இதன் விளைவாக, வெறும் 87 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து நிற்கிறது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் எடுத்ததோ 416 ரன்கள்.

பும்ராவிடம் ஏழாவது ஓவரில் முதலில் சிக்கியவர் துவக்க வீரர் ஜான் கேம்பல். அதற்கடுத்து 9வது ஓவரை வீச வந்தார் பும்ரா. அந்த ஓவரில்தான் ஹாட்ரிக் சாதனை நிகழ்ந்தது.

அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் டேரன் பிராவோ, மூன்றாவது பந்தில் ப்ரூக்ஸ் ஆகி‍யோரை காலிசெய்ய, நான்காவது பந்தில் பாவப்பட்டு தனது விக்கெட்டை விட்டுக்கொடுக்கும் ராஸ்டன் சேஸ் எல்பிடபிள்யூ ஆனார். ஆனால், அதற்கு நடுவர் அவுட் கொடுக்க மறுத்தார்.

நடுவரின் முடிவுக்கு பலரும் அமைதியாகவிட, கேப்டன் கோலி விடவில்லை, பந்து காலில்தான் பட்டது என்பதை உறுதிபட நம்பிய கோலி, ரிவ்யூ கேட்டார். ரிவியூ சோதனையில் சேஸ் அவுட் என்பது நிரூபிக்கப்பட்டது. இதனால், பும்ராவுக்கு கிடைத்ததோ ஹாட்ரிக் விக்கெட்.

விராத் கோலி துணிந்து ரிவ்யூ கேட்காமல் இருந்திருந்தால், பும்ராவுக்கு ஹாட்ரிக் விக்கெட்டும், இந்தியாவுக்கு ஒரு கூடுதல் விக்கெட்டும் கிடைத்திருக்காது.

இந்திய அளவில், டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் எடுத்த மூன்றாவது வீரராக இணைந்தார் பும்ரா. அந்த வரிசையில், ஹர்பஜன் சிங் மற்றும் இர்ஃபான் பதான் ஆகியோர் ஏற்கனவே உள்ளனர். இர்ஃபானைப் பொறுத்தவரை அவர் கடந்த 2006ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.