கான்பெரா: ஒருநாள் கிரிக்கெட்டில், விரைவான முறையில் 12,000 ரன்களை எட்டிய வீரர் என்ற உலக சாதனையைப் படைத்துள்ளார் இந்தியக் கேப்டன் விராத் கோலி.

இதன்மூலம், இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் படைத்த சாதனையை முறியடித்துள்ளார் கோலி. இவர் மொத்தமாக 242 இன்னிங்ஸ்கள் ஆடி இந்த ரன்களை எட்டியுள்ளார். இதற்கு முன்னர், சச்சின் டெண்டுல்கர் 300 இன்னிங்ஸ்கள் ஆடி இந்த சாதனையைப் படைத்திருந்தார்.

இப்பட்டியலில், மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் பாண்டிங்(314 இன்னிங்ஸ்கள்), நான்காமிடத்தில் இலங்கையின் சங்ககரா(336 இன்னிங்ஸ்கள்), ஐந்தாமிடத்தில் ஜெயசூர்யா(379 இன்னிங்ஸ்கள்) மற்றும் ஆறாமிடத்தில் அதே இலங்கையின் ஜெயவர்தனே(399 இன்னிங்ஸ்கள்) ஆகியோர் உள்ளனர்.

விராத் கோலியைப் பொறுத்தவரை, இந்த 12,000 ரன்கள் சாதனை மட்டுமல்ல. ஒருநாள் அரங்கில் விரைவான 8,000 ரன்கள், 9,000 ரன்கள், 10,000 ரன்கள் மற்றும் 11,000 ரன்கள் என்ற சாதனையை எட்டியவர் இவர்.

மேலும், 250 ஒருநாள் போட்டிகளில் ஆடிய 9வது இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார் விராத் கோலி.