மும்பை: இந்திய அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளர் நியமிக்கப்படும் விஷயத்தில், கேப்டன் விராத் கோலியிடம் எத்தகைய கருத்தும் கேட்கப்பட வாய்ப்பில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; இந்திய அணிக்குப் புதிய தலைமைப் பயிற்சியாளரை தேர்வுசெய்யும் செயல்பாடுகள் அனைத்தையும், முன்னாள் இந்தியக் கேப்டனும், 1983 உலகக்கோப்பையை வென்றவருமான கபில் தேவ் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு மேற்பார்வை செய்யும்.

அணில் கும்ப்ளே இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தபோது நடந்த விஷயங்களை மனதில் வைத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அனில் கும்ப்ளேவுக்கு விராத் கோலிக்கும் ஒரு சமயத்தில் ஆகாமல் போய், அதன் விளைவாக அவர் தலைமைப் பயிற்சியாளர் பதவியைவிட்டு விலகிவிட, விராத் கோலி ரவிசாஸ்திரிக்கு ஆதரவு தெரிவிக்க, அவர் தலைமைப் பயிற்சியாளர் ஆனார்.

ஆனால், தற்போதைய சூழலில், புதிய தலைமைப் பயிற்சியாளர் தேர்வில், விராத் கோலிக்கு எந்த முக்கியத்துவமும் இருக்காது என்றே தெரிகிறது. தேர்வுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கபில் தேவ், விராத் கோலியை கண்டுகொள்ளமாட்டார் என்றே தொடர்புடைய தகவல்கள் தெரிவிக்கின்றன.