சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் செய்துள்ள 100 சதங்கள் என்ற சாதனையை விராத் கோலி முறியடிப்பார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேர் வார்னே கூறியுள்ளார்.

இதே கருத்தைத்தான் சில நாட்களுக்கு முன்னர் இந்திய முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்திர ஷேவாக்கும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2013ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒட்டுமொத்தமாக ஓய்வுபெற்ற டெண்டுல்கர் டெஸ்டில் 51 சதங்களும், ஒருநாள் போட்டிகளில் 49 சதங்களும் அடித்திருந்தார். அந்த சாதனையை யாரும் முறியடிப்பது மிகக் கடினம் என்று அப்போது பேசப்பட்டது.

ஆனால், விராத் கோலி டெண்டுல்கரின் சாதனைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளார். ஒருநாள் சதங்களைப் பொறுத்தளவில், டெண்டுல்கரின் 49 சதங்கள் என்ற சாதனையை முறியடிக்க, கோலிக்கு இன்னும் 7 சதங்கள் மட்டுமே தேவை.

“அனைத்து வகையான போட்டிகளுக்குமான சிறந்த பேட்ஸ்மேன் யார் என்று கேட்டால் நான் விராத் கோலியைத்தான் சொல்வேன். அதேசமயம், சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் என்பதில் எனது முதல் தேர்வு ஸ்மித்தான். ஸ்டீவ் ஸிமித் இல்லையென்றால் எனது தேர்வு விராத் கோலியாக இருக்கும்” என்றார் ஷேன் வார்னே.