சென்னை

சிபிஐ நீதிமன்றத்தில் 2 ஜி வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டதால் பாஜக அவர்களிடம் மன்னிப்பு கேட்குமா என நடிகை குஷ்பு வினா எழுப்பி உள்ளார்.

கடந்த சுமார் பத்தாண்டுகளாக பரபரப்பாக பேசப்பட்டு வந்த 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கிடு வழக்கில் ஆ.  ராசா,   கனிமொழி உட்பட அனைவரும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.    சி பி ஐ தனது குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தவறியதால் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக நீதிபதி ஷைனி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.   இது குறித்து பல அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

நடிகையும் காங்கிரஸ் பிரமுகருமான குஷ்பு ஒரு தொலைக்காட்சியில் இது பற்றிப் பேசி உள்ளார்.  அப்போது அவர், “இந்த தீர்ப்பு எனக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.   ஆரம்பம் முதலே இந்த வழக்கில் பொய்க் குற்றச்சாட்டுக்கள் மட்டுமே இருந்தன.   கடந்த 2014 வருட பாராளுமன்ற தேர்தலில் பாஜக வின் பிரசாரங்களில் 2 ஜி யில் ஊழல் என பேசப்பட்டது.   காங்கிரசும் திமுகவும் இணைந்து ரூ. 1.76 லட்சம் கோடி ஊழல் செய்ததாக அந்தக் கட்சி கூறியது.   தற்போது அனைவரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.   எனவே பாஜக தற்போது மன்னிப்பு கேட்குமா?   பொறுத்திருந்து பார்ப்போம்.    விடுதலை அடைந்துள்ள அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்”  என கூறி உள்ளார்.

குஷ்பு காங்கிரசில் இணையும் முன்பு திமுகவில் உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.