Random image

ரஜினி கட்சியில் சேர்கிறார் குஷ்பு?

டிகர் ரஜினி கட்சி துவங்கினால் அதில் சேரப்போவதாக குஷ்பு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் கேட்கப்பட்டபோது வெறும் வணக்கத்தை மட்டுமே பதிலாக அளித்துள்ளார் குஷ்பு.

பிரபல நடிகை குஷ்பு, பொதுவிசயங்கள் குறித்து பரபரப்பான கருத்துகளைக் கூறி அனைவரின் பார்வையும் தன் பக்கம் ஈர்த்தவர். கற்பு குறித்து அவர் தெரிவித்த கருத்து பெரும் விவாதப்பொருள் ஆனது. சில அமைப்பினர் அவர் மீது தமிழகம் முழுதும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளில் இருந்து விடுபட்ட குஷ்பு, அரசியலில் தனக்கு மிகுந்த ஆர்வம் இருப்பதாகவும் குறிப்பாக  காங்கிரஸை மிகவும் பிடிக்கும் என்றும் பேட்டியளித்தார்.

இதையடுத்து அவர் காங்கிரஸ் கட்சியில் இணையப் போவதாக செய்தி பரவியது. ஆனால்,  அவர் கடந்த 2010ம் ஆண்டு மே மாதம் 14ம் தேதி அப்போதைய முதல்வர் கருணாநிதி முன்பாக தி.மு.க.வில் இணைந்தார்.

முதல்வர் கருணாநிதி மீது தனக்கு எப்போதும் பெரிய மரியாதை உண்டு என்றும், அதனால் தி.மு.க.வில் இணைவதாகவும், இனி முழு நேர அரசியலில் ஈடுபடப் போவதாகவும்  கூறினார்.

அதன்படி தி.மு.க. மேடைகளில் சிறப்புப் பேச்சாளராக தோன்றி பேசினார். 2014 பாராளுமன்ற தேர்தலின் போது தி.மு.க.வுக்காக பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்த நிலையில், தி.மு.க.,வில் யார் அடுத்த தலைவர் ஆவது, என்கிற சர்ச்சை ஏற்பட்டது. அப்போது, செய்தியாளர்களிடம், “தி.மு.க., என்பது ஜனநாயக ரீதியிலான இயக்கம். இங்கே பொதுக் குழு, செயற்குழுவெல்லாம் இருக்கிறது. பொதுக் குழு, செயற்குழு கூடி முடிவெடுத்து, யாரை தலைவராக தேர்வு செய்கின்றனரோ, அவர்கள் தான், அடுத்த தலைவராக வர முடியும்’ என பதில் அளித்தார்.

இது கட்சியின் (அப்போதைய) செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியது. நிகழ்ச்சி ஒன்றுக்காக திருச்சி வந்த குஷ்புவ அவர்கள் அவமானப்படுத்தினர். இதையடுத்து தி.மு.க.வில் இருந்து விலகிய குஷ்பு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அங்கு அவருக்கு அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பொறுப்பு அளிக்கப்பட்டது.

அதே நேரம் அவருக்கு கட்சிக்குள் சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதும் தொடர்கிறது.

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “நடிகர் ரஜினி கட்சி ஆரம்பித்தால், கொள்கை பரப்பு செயலராக சேர்வேன்’ என குஷ்பு கூறியிருந்தார். இது காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் குஷ்புவின் ட்விட்டர் பக்கத்தில், “ரஜினி கட்சியில் இணைவது உறுதிதானா” என்று ரஜினி ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பினர். இதற்கு எந்த பதிலும் கூறாத குஷ்பு, வணக்கத்தை மட்டுமே பதிலாக தந்துள்ளார்.

இதற்கிடையே ரஜினி ரசிகர் மன்ற வட்டாரத்தில், “ரஜினி, கட்சி ஆரம்பித்தவுடன் திரைத்துறையினரும் பலரும் இணைய தயாராக இருக்கிறார். ஆனால் அவர்களில் எவரை சேர்த்துக்கொள்ளலாம் என்பது ரஜினியின் முடிவில்தான் இருக்கிறது” என்கின்றனர்.