சென்னை: சட்ட ஒழுங்கு பிரச்சினையை தவிர்க்கவே குஷ்பு கைது செய்யப்பட்டதாகவும்,  பாஜக மட்டுமல்ல..எந்த கட்சியாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்” என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

இந்துபெண்களை இழிவு படுத்தி பேசியதாகக் கூறிய விசிக தலைவர் திருமாவளவனுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று திருமாவளவன் தொகுதி யான, சிதம்பரத்தில் பாஜக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. . அதே போல பாஜகவுக்கு எதிராக விசிகவினரும் போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர். ஆனால், சட்ட ஒழுங்கு பிரச்னை எழும் என்பதால் இரு தரங்பபு போராட்டங்களுக்கு காவல்துறை தடை விதித்தது.

ஆனால், தடையை மீறி போராட்டம் என நடைபெறும் என அறிவித்த குஷ்பு, போராட்டத்தில்  பங்கேற்க இன்று காலை காரில் சென்றார். கார் முட்டுக்காடு அருகே சென்றபோது, அவரை மடக்கி காவல்துறையினர் கைது செய்தனர். அதுபோல, போராட்டம் நடத்தச் சென்ற பாஜக உறுப்பினர் கே.டி.ராகவனும் மதுராந்தகம் அருகே கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து இன்று  செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,  பாஜக மட்டும் அல்ல தமிழகத்தில்  சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்தும் எந்த கட்சியாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,  சட்ட ஒழுங்கு பிரச்னையை தவிர்க்கவே குஷ்பு கைது செய்யப்பட்டார், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே குஷ்பு கைது செய்யப்பட்டார் என்றும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை  என்றார்.

மேலும், திருமாவளவன் மீதான புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.