a
 
உளுந்தூர்பேட்டை:
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் தேர்தல் பிரச்சாரம் செய்த போது, கூச்சல் போட்ட தொண்டரை கடுமையாக  மிரட்டினார். “சத்தம் போடுற அந்த ஆளை அடிச்சு தூக்குடா” என்று ஆத்திரத்துடன் கத்தினார்.
தேமுதிக – மக்கள் நலக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார்.  இத் தொகுதிக்குட்பட்ட செம்மனங்கூர், ஆரணி மற்றும் பல்வேறு கிராமங்களில் பிரசாரம் செய்தார்.
அப்போது, “ஊடகங்கள் அனைத்தும் கருத்து கணிப்பு என்ற பெயரில் கருத்தை திணிக்கிறார்கள். ஒரு சில ஊடகங்கள் தி.மு.க.வுக்கு சாதகமாகவும், ஒரு சில ஊடகங்கள் அ.தி.மு.க.வுக்கு சாதகமாகவும் கருத்து கணிப்பு வெளியிட்டு வருகிறார்கள்.
டெல்லி சட்டசபை தேர்தலில் கெஜ்ரிவால் தோற்று விடுவார் என்று கருத்து கணிப்பு  வெளியிட்டனர். ஆனால் அவர் வெற்றிபெற்றார். பீகாரில் லாலுபிரசாத் தோற்றுவிடுவார் என்று கருத்து கணிப்பில் கூறினார்கள். அவரும் வென்றார்.  அதுபோல தமிழகத்தில்  கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி நாங்கள் வெல்வோம்.
அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் மாறி, மாறி மக்களை ஏமாற்றி வருகின்றன. எனது தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சிறந்த ஆட்சியை, நேர்மையான ஆட்சியை அளிப்போம்” என்று காரசாரமாக விஜயகாந்த் பேசிக்கொண்டருந்தபோது, ஒரு தொண்டர் உணர்ச்சிவசப்பட்டு கூச்சலிட்டார்.
அவரை கையை நீட்டி அமைதியாக இருக்குமாறு கூறினார் விஜயகாந்த். ஆனால் அந்த தொண்டர் தொடர்ந்து குரல் கொடுக்கவே  ஆத்திரமான விஜயகாந்த், “அடிச்சு தூக்குடா அந்த ஆளை” என்று கத்தினார். தொடர்ந்து, “எத்தனை தடவைதான் சொல்றது… கம்முன்னு இருக்கணும் என்னா? என்று சொல்லிவிட்டு பேச்சைத் தொர்ந்தார்.