‘பத்மஸ்ரீ’ விருதுக்கு பேட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் பெயர் பரிந்துரை!

டில்லி,
2018-ம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருதுக்கு பேட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் பெயரை முன்னாள் மத்திய அமைச்சர் விஜய் கோயல்  பரிந்துரை செய்துள்ளார்.

சமீபத்தில் டென்மார்க் ஓபன் பட்டம் வென்ற ஸ்ரீகாந்த், கடந்த இரு மாதங்களில் மொத்தமாக 4 பட்டங்களை கைப்பற்றியுள்ளார். இதன்மூலம் ஒரு சீசனில் 4 சூப்பர் சீரிஸ் பட்டங்கள் வென்ற 4-வது வீரர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார் ஸ்ரீகாந்த்.

இதன் காரணமாக அவரது பெயரை பத்மஸ்ரீ விருதுக்கு முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த விஜய் கோயல் பரிந்துரை செய்துள்ளார்.

தொடர்ந்து பல்வேறு வெற்றிகளை குவித்துள்ள ஸ்ரீகாந்த்,  உலக பேட்மிண்டன் தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு  முன்னேறி உள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற சுவிஸ் ஓபன் தொடரில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ஸ்ரீகாந்த் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.