சான் ஃப்ரான்ஸிஸ்கோ

விமானத்தில் பயணம் செய்த ஒரு பெண் கடத்தப்படுவதை அறிந்த விமானப்பணிப்பெண், அவரை பைலட் உதவியுடன் மீட்டுள்ளார்.

விமானப்பயணம் என்பது எல்லோருக்குமே ஒரு மகிழ்ச்சியான ஒரு நிகழ்வு,  பலரும் தங்கள் விடுமுறையைக் கழிக்கவோ, உல்லாச பயணத்துக்கோ தான் அதிகம் விமானப்பயணம் மேற்கொள்கின்றனர்.  சிலர் வேலை நிமித்தமாக பயணிப்பதுண்டு.  ஆனால் விமானப்பணிப்பெண்களின் வேலையே பயணிப்பது தான்.

செலியா ஃப்ரெட்ரிக் என்பவர் அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பணிப்பெண்.  அவர் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு விமானத்தில் நடந்தது.

விமானம் அமெரிக்காவின் சான் ஃப்ரான்சிஸ்கோ நோக்கிப் பறந்துக் கொண்டிருந்தது.  விமானத்தினுள் ஒன்று செலியாவின் கண்ணை உறுத்தியது.  நன்கு உடையணிந்த ஒருவரின் அருகில் ஒரு சிறு பெண் பழைய உடையுடன், பார்க்கவும் அழுக்காக அமர்ந்திருப்பதை பார்த்தார்.  அந்தப் பெண்ணை தாண்டிச் செல்லும் போது அவர் செலியாவை பார்த்தது ஏதோ ஒன்றைச் சொல்ல துடிப்பது போல் இருந்தது.

செலியா அந்த மனிதரிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தார்.  அவர் சரியாக பேசாமல் முகத்தை திருப்பிக் கொண்டார்.  செலியாவுக்கு அது சந்தேகத்தை உண்டாக்கியது.  கழிப்பறக்குள் சென்ற செலியா, ஒரு காகிதமும் பேனாவும் அங்கு வைத்து விட்டு வெளியே வந்தார்.  அந்த மனிதருக்கு தெரியாமல் கழிவறைக்குள் செல்லுமாறு அந்தப் பெண்ணுக்கு கண்ஜாடை காட்டினார்.  அந்தப் பெண்ணும் அதை உணர்ந்து கழிவறைக்குப் போய் வந்தார்.  உடனே அங்கு சென்ற செலியா அந்தக் காகிதத்தில் ”ஹெல்ப் மீ” என ஆங்கிலத்தில் எழுதியிருப்பதைப் பார்த்தார்,

நேராக விமான ஓட்டியிடம் சென்று இதைப்பற்றி தெரிவித்தார். விமான ஓட்டி இதை போலிசுக்கு தெரிவித்தார்.  விமானம் இறங்கியதும் அந்த நபர் கைது செய்யப்பட்டார்.  விசாரணையில் அந்த பெண் இரண்டு மாதங்களுக்கு முன் அவர் பெற்றோரிடம் இருந்து கடத்தப்பட்டு விற்பனைக்காக அழைத்துச் செல்லப்படுவது தெரிய வந்தது.

இது நடந்தது 2011ஆம் வருடம்.  அப்போது கடத்தப்பட்ட பெண்ணின் வயது 14.  இந்த நிகழ்வுக்குப் பின் செலியா விமானப் பணிப்பெண்களுக்கு இது போன்ற நேரத்தில் பயணிகளுக்கு உதவ ஏர்லைன்ஸ் அம்பாசிடர் இண்டர்நேஷனல் குழுமத்தில் பயிற்சியாளர் ஆக்கப்பட்டார்.  இந்தக் குழுமம் இது போல் கடத்திச் செல்லும் பயணிகளுக்கு உதவி வருகிறது.

சமீபத்தில் இதை ஒரு பொது நிகழ்வில் நினைவு கூர்ந்த செலியா, அந்தப் பெண் இப்போது தனது பெற்றோருடன் சேர்க்கப்பட்டு இன்றும் தன்னுடன் தொடர்பில் உள்ளதாக கூறினார்.

ஐ நா சபையின் சமீபத்திய அறிவிப்பின்படி, ஒவ்வொரு வருடமும் இது போல 12 லட்சம் குழந்தைகள் கடத்தப்படுவதாக தெரிகிறது.  கடத்தப்பட்ட இந்த சிறுவர்களும், சிறுமிகளும் பாலியல் தொழிலிலும், போதை மருந்துகள் கடத்தும் தொழிலிலும் வலுக்கட்டாயமாக ஈடுபட வைப்பதாகவும் தெரிவித்துள்ளது.

செலியா போல் ஒவ்வொருவரும் இருந்தால் இது போன்ற கடத்தலில் இருந்து சிறுவர்களையும் சிறுமிகளையும் மீட்பது எளிதானதே