டெல்-அவிவ் : சேதமடைந்த சிறுநீரகங்களைப் புத்துயிரூட்டி அவற்றின் செயல்பாட்டை மேம்படுத்தக்கூடிய புதிய ஆய்வு ஒன்று தற்பொழுது நிறைவேறியிருக்கிறது.

இஸ்ரேல் நாட்டின் மிகப்பிரபலமான ஷெபா மருத்துவ மையத்திலுள்ள எட்மண்ட் மற்றும் லில்லி சஃப்ரா குழந்தைகள் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான சிறுநீரக மற்றும் குழந்தை ஸ்டெம் செல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் பெஞ்சமின் டெக்கெல் இந்த ஆய்வை நடத்தி, இந்த வார ‘செல் ரிப்போர்ட்ஸ்’ எனும் கௌரவமிக்க பிரபல மருத்துவ இதழில் வெளியிட்டுள்ளார்.

இந்த ஆய்வின் மூலம் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறை சரி செய்வதில் மாற்றமும் டயாலிசிஸ் செய்வதைத் தவிர்க்கவும் உதவும் என்று கூறப்பட்டுள்ளது.

பேராசிரியர் டெக்கலும் அவரது குழுவும் நடத்திய இந்த ஆய்வு கடந்த கால ஆய்வுகளில் அறியப்பட்ட கூற்றின் அடிப்படையில் ஒரு புதுமையான தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளது.

இது ஆரோக்கியமான சிறுநீரக உயிரணுக்களை நோயுற்ற சிறுநீரகங்களிலிருந்து பிரித்தெடுத்து, ஆய்வக சூழலில் அந்த உயிரணுக்களைப் பெருக்கி, ‘சிறுநீரக கோளங்களாக’ முப்பரிமாண வளர்ச்சியில் உருவாக்கி, பின் மீண்டும் சிறுநீரகத்தில் சேர்க்கும்போது இவை ஆரோக்கியமாகவும் பாதிப்படைந்திருக்கும் மற்ற திசுக்கள், அணுக்களின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

 

 

கண்டுபிடிப்பின் முக்கிய அம்சம், இந்த புதிய தொழில்நுட்பம் நோயாளியின் சொந்த உயிரணுக்களைப் பயன்படுத்துவதால் நோயெதிர்ப்பு சக்தி தொடர்பான பிரச்சனைகளைத் தவிர்க்கிறது.

முதற்கட்டமாக மாற்று உயிரினமாக எலிகளைக் கொண்டு பரிட்சித்துப் பார்த்ததில் வெற்றி கண்டுள்ளனர். அடுத்த கட்டமாக நாள்பட்ட சிறுநீரக கோளாறு உள்ள நோயாளி்க்குப் பரிசோதிக்க இந்த தொழில்நுட்பத்தை வணிகமயமாக்கவுள்ள கிட்னி க்யூர் பயோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்த திட்டத்திற்குத் தலைமை தாங்கிய பேராசிரியர் டெக் கூறுகையில், ‘இந்த தொழில்நுட்ப முன்னேற்றம், நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இது ஒரு முக்கியமான செய்தி. இனி வரும் காலங்களில் உலகளவில் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட கோடிக்கணக்கான நோயாளிகளுக்கு, புதிய சிறுநீரக திசுக்களை உருவாக்கும் இந்த கண்டுபிடிப்பு பெரிதும் உதவும்’ என்று கூறுகிறார்