மரண தண்டனையை தூக்கிலிடுங்கள்!

மரண தண்டனையை தூக்கிலிடுங்கள்!

சிறப்புக் கட்டுரை: சமூக ஆர்வலர் பாரதி சுப்பராயன்

(தனது பெண்குழந்தையை கொலை செய்த தாயை முன்னிட்டு,  தூக்குதண்டனை அவசியம் என்று மீண்டும் பேச்சு எழுந்திருக்கும் சூழலில் இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது.)

“நியூஸ் தெரியுமா சார். கொடுமை சார் நெனச்சே பார்க்க முடியலை.”

“என்ன விஷயம் சொல்லுங்க.”

“நாகர்கோவில்ல, திவ்யா என்ற பெண்ணுக்கு இரட்டைப் பெண் குழந்தை பிறக்குது. கொஞ்ச நாள் கழிச்சு, இரண்டு குழந்தைகளும் இறந்து விடுது. பால் குடிக்கும் போது மூச்சுத் தினறி குழந்தைகள் இறந்ததாக சொல்லி குழந்தைகளைப் புதைத்து விடுகின்றனர்.

அவர்கள், அவசர அவசரமாக குழந்தைகளைப் புதைத்ததை பார்த்து சந்தேகம் வந்த அக்கம் பக்கத்தவர், போலிஸில் புகார் செய்கின்றனர். அவர்கள் விசாரிக்கும் போது தான் அந்தப் பெண்ணே தன் குழந்தைகளை கொன்றிருக்கிறார் என்று தெரிய வருகிறது.

ஏன் என்று விசாரித்ததற்கு, எனக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உண்டு, இரண்டாவதும் இரட்டை பெண் குழந்தையாகப் பிறந்து விட்டதே என்பதால் கொன்று விட்டேன்னு சொல்லிருக்கா. என்ன கொடுமை சார் இது.

பெத்த அம்மாவே தன் குழந்தையை கொல்வாளா? பச்ச மன்னு சார் அது. அதுக்கு என்ன தெரியும். நீங்க எல்லாம் தூக்கு தண்டனை கூடாது கூடாதுன்னு சொல்றீங்க. இவளை எல்லாம் தூக்குல போட்டாத் தான் சார் எம்மனசே ஆறும்.”

“நீங்க மகாபாரதக்கதை படிச்சிருக்கீங்களா ராமன்.”

“படிச்சிருக்கேன். ஏன் கேக்கறீங்க” “அதுல, கர்ணனை கொன்றது யார்.”

 “இதுல என்ன சந்தேகம். அர்சுனன் தான்.”

“அர்சுனனோட அம்பு தான் கர்ணனோட உயிரை எடுத்தது என்றாலும் அதற்கு முன்னாலேயே அஞ்சு பேர் கர்ணனை கொன்னுட்டாங்க.

தன் மகன் அர்சுனனுக்கு, பின்னால் ஆபத்து வந்து விடக்கூடாது என்பதற்காக முன்னாலேயே மாறுவேடமிட்டு சென்று கர்ணனின் கவச குண்டலங்களை தானமாகப் பெற்ற இந்திரன்,

காட்டில் தவறுதலாய் அம்பு விட்டதற்காக, ‘உனது தேர் சக்கரம், போர் நடக்கும் போது பூமியில் புதையக் கடவது’ என்று சாபமிட்ட அந்தனன்,

தன்னிடம், தானொரு அந்தனன் என்று பொய்சொன்னான் என்பதற்காக, ‘தக்க சமயத்தில் நீ கற்ற பிரம்மாஸ்திர வித்தை உனக்கு மறந்து போகும்’ என சாபமிட்ட பரசுராமர்,

‘அர்சுனன் மேல் நாகாஸ்திரத்தை ஒரு முறைக்கு மேல் பிரயோகிக்கக் கூடாது’ என்று வரம் வாங்கிய குந்தி

கடைசியாக கர்ணனின் புண்னியங்கள் அனைத்தையும் தானமாகப் பெற்ற கிருஷ்னன், என்று அர்சுனனுக்கு முன் ஐந்து பேர் கர்ணனை கொன்று விட்டதாகச் செல்லும் கதை.”

“அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்.”

“அர்சுனனின் அம்பு தான் கர்னனின் உயிரை எடுத்தது என்றாலும் அவனை முன்பே ஐந்து பேர் கொன்று விட்டார்கள்.

அது போல் இந்தப் பெண்னின் கையால் தான் குழந்தைகள் கொல்லப்பட்டது என்றாலும், அதற்கு முன்பே நான்கு பேர் அந்தக் குழந்தைகளைக் கொன்று விட்டனர்.

பெண் குழந்தையாய் போய் விட்டது என்று குழந்தையை பார்க்கக்கூட வராத கணவன்,

மூனையும் பொட்டையா பெத்துட்டா என ஏசும் சொந்தங்கள்,

ஆண் தான் பாதுகாப்பு, பெண் சுமை என காலகாலமாக பெண்னை அடிமையாகவே வைத்திருக்கும் ஆணாதிக்க வெறியர்கள்,

பெண்குழந்தை பிறந்து விட்டது என்று தன் கணவன் தன்னை ஏற்கா விட்டால் தன் வாழ்க்கையே பரிபோய்விடும் என்ற பயத்தை உண்டாக்கிய நமது திருமனக் கட்டமைப்பு என்று அனைத்தும் சேர்த்து தானே இந்தப் பெண்னைக் குற்றவாளி ஆக்கி இருக்கிறது. ”

 “இப்ப என்ன சொல்ல வரீங்க?”

“இங்கு நடக்கும் ஒவ்வொரு குற்றச்சம்பவத்துக்கு பின்னாலும் இந்த சமூகத்தின் பங்களிப்பு உள்ளது. உடுமலைபேட்டை சாதி ஆணவக் கொலையை எடுத்துக்கொண்டாலும், தன் சாதி மக்கள் கேலி பேசுவர் என்ற காரணத்தையும் சொல்கிறார் கொலையாளி. அது போக, மோசமான குடும்பப் பின்னனி, வாழும் சூழ்நிலை என்று பல விஷயங்கள் ஒரு குற்றவாளியை உருவாக்குகிறது என்கிறார்கள் மனநலமருத்துவர்கள்”

“மோசமான சூழ்நிலையில் இருக்கும் எல்லோருமே இதே போல் தவறு செய்கின்றனரா?”

“சரியான கேள்வி. அவரவர் செல்லும் பாதையை அவரவர் தான் தேர்ந்தெடுக்கிறார் என்பது உண்மை தான் என்றாலும் அவர்களது தேர்வில் இருக்கும் சமூகத்தின் ஆதிக்கத்தையும் நாம் கவனிக்க வேண்டும்”

“அப்படினா, சமூகம் தான் குற்றவாளி. அதனால், யாருக்கும் தண்டனையே கொடுக்கக்கூடாது. போலீஸ் ஸ்டேசன் கோர்ட்டு எல்லாம் வேஸ்ட்டுனு சொல்றீங்களா

.” “இல்லை. தண்டனைகளே வேண்டாம் என்று சொல்லவில்லை மரண தண்டனை மட்டுமே கூடாது என்கிறேன்.”

“ஏன் மரணதண்டனை மட்டும் கூடாது.?”

“முதல் காரணம், ஒரு உயிரை எடுப்பது என்பது மனிதநேயமற்ற செயல். இரண்டாவது, குற்றத்தில் சமூகத்தின் பங்களிப்பும் உண்டு. மூன்றாவது, சட்டமும் தவறு செய்யும். குற்றமிழைக்காத அப்பாவி மனிதர்கள் பலியாக வாய்ப்புள்ளதால். யாருக்கேனும் தவறுதலாக ஆயுள் தண்டனை கொடுத்து விட்டு பிறகு தவறு என உணர்ந்தால், அதை திரும்பப் பெற முடியும். மரண தண்டனையில் அது முடியாது.

மரண தண்டனை விதிக்கப்பட்டு அவர் இறந்த பின் அவர் குற்றவாளி அல்ல எனத் தெரியவந்த சம்பவங்கள் ஏராளமாய் உலகம் முழுவதும் நடந்துள்ளது. மிச்சிகன் பல்கலைகலகத்தை சேர்ந்த Samuel R gross என்பவர் நடத்திய ஆராய்ச்சியில் அமெரிக்காவில் மட்டும் சராசரியாக சுமார் 4.1% பேர் தவறுதலாக மரண தண்டனைக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்கிறார்.

இது மிகவும் குறைவே, உண்மை நிலவரம் இதை விட அதிகமாகவே இருக்கும் என்கிறார். நான்காவது, குற்றத்தை குறைக்க அது சரியான வழியல்ல. உலகையே திரும்பிப் பார்க்க வைத்த நிர்பயா கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவங்களுகழகு மரண தண்டனை கொடுத்து விட்டனர்.

அதனால் வன்புணர்வு என்பது இந்த நாட்டில் நின்று விட்டதா? எத்தனை எத்தனை வன்புணர்வுச் சம்பவங்களை செய்தித்தாள்களில் அனுதினமும் நாம் படித்துக் கொண்டிருக்கிறோம்?”

“இந்த மாதிரி கொடுமையான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை கொடுத்தால் பயம் வரும். குற்றம் குறையும். வேறு எப்படி குற்றங்களை குறைப்பீர்கள்.”

“தண்டனைகள் மட்டுமே குற்றத்தை குறைப்பதில்லை. அங்கு இருக்கும் சமூகத்தின் முதிர்ச்சி தான் அதை செய்கிறது. உங்களுக்கு ஒன்று தெரியுமா? மரண தண்டனைகள் அமுலில் இருக்கும் நாட்டில் நடக்கும் குற்றங்களை விட மரண தண்டனையை ஒழித்த நாடுகளில் நடக்கும் குற்றங்கள் குறைவு. ”

“அது எப்படி சாத்தியம்?”

“அங்கு தனி மனித சுதந்திரம், பெண் உரிமை, போன்ற முதிர்ந்த சமூகமிருக்கிறது. அதனால் தான் சொல்கிறேன், குற்றங்களைக் குறைக்க கடுமையான தண்டனைகளை அமல் படுத்துவதை விட சமூகத்தை முதிர்ச்சியடைய செய்வதே நிரந்தர தீர்வு. இதை உணர்ந்து தான் உலகில் சுமார் 160 நாடுகள் மரணதண்டனையை கைவிட்டு விட்டன.”

“கடுமையான தண்டனைகள் கொடுக்கா விட்டால் நிர்பயா சம்பவம் மாதிரி கொடூரச் சயலால் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் மனசு எப்படி ஆறும்.”

“பழிக்குப் பழி என்னும் கோட்பாட்டை தனிமனிதன் வேண்டுமானால் உயர்த்திப் பிடிக்கலாம், ஒரு நாடும் சட்டமும் அதை செய்யக்கூடாது. நாடு வழங்கும் நீதியின் குறிக்கோள் குற்றத்தை தடுப்பதற்காகவும், குற்றவாளியைத் திருத்துவதற்காகவுமே இருக்க வேண்டும்.”

“நிர்பயாக்கு நடந்த மாதிரி உங்க வீட்டுல நடந்தாலும் இதே தான் சொல்வீங்களா.?”

“கடைசியா இங்க தான் வருவீங்கன்னு தெரியும். எங்க வீட்டுல நடந்தாலும் சரி, உங்க வீட்டுல நடந்தாலும் சரி, ஒரே பதில் தான்”

“இது விதண்டாவாதம். பொய்.”

“இந்தக் கருத்துக்களை உடனடியா ஏத்துக்க உங்க ஈகோ இடம் கொடுக்காது. வீட்டுக்குப் போய் நல்லா சிந்தியுங்கள். ஏற்றுக்கொள்வீர்கள். நன்றி.”