வெட்றது வாழ்க்கை இல்ல..!

சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன்

காதல் கல்யாண ஜோடியை வெட்டிக்கொன்ன அந்த பாவிகளை பத்தி நண்பர் பேசிகிட்டேபோனாரு. காலைல வாங்கிக் இப்படியா கண்ணை கட்டும்னு நாம பேச ஆரம்பிச்சோம்.

சார் ஆணவக்கொலை மேட்டர்ல உண்மையிலேயே பெரும்பாலும் மெயின் அக்கியூஸ்ட் முதல்ல சொந்தக்காரங்க இருப்பாங்க..  அப்புறம் அக்கம் பக்கம் இருக்கிறவன் .. பின்னாடிதான் கொலைகாரங்களே லிஸ்ட்டுல வருவாங்க

பொண்ணோ, பையனோ வீட்டை விட்டு ஓடிப்போயி கல்யாணம் பண்ணிகிட்டாங்கன்னு தெரிஞ்சதுமே குடும்பமே நொறுங்கிப்போயிடும்..

அந்த வீடே எப்டி இருக்கும்? பாத்து பாத்து எப்படியெல்லாம் வளர்த்திருப்போம்னு ஆம்பளை சைடு கதறிகிட்டு இருக்கும்.. ராத்திரி பக பாக்காம இதுங்களுக்கு எவ்ளோவெல்லாம் பாடு எடுத்திருப்பேன்னு, குந்துன எடமெல்லாம் சிந்துன மூக்கும் கையுமா பொம்பளை சைடு மார்ல அடிச்சிகிட்டு சாகும்.. ஒரு விநாடிக்கு விநாடிக்கு சாகற கொடுமையான கட்டம் அது. அனுபவிச்சவங்களுக்கு மட்டுந்தான் அதோட உச்சகட்டவலி தெரியும்.

அந்த நேரத்துலதான், கரக்ட்டா இதுக்குன்னே காத்திருந்தா மாதிரி சொந்த பந்தம் அக்கம்பக்கமெல்லாம் எழவு வீடு மாதிரி ஆயிட்ட வீட்டுக்கு படையெடுக்கும்.. நாம யாரு, நம்ம பரம்பரை இன்னா.. நம்ம கெத்து இன்னா.. இப்படி ஆக்குனவங்கள சும்மாவே விடக்கூடாதுன்னு உசுப்பேத்திவிடும். ஜும் போட்டுப்பாத்தா, இதுல பாதிபேரு ஆத்திரம் அவசரத்துக்கு பல தடவை கேட்டாலும் ஒதவியே பண்ணாத கேசா இருக்கும். அப்புறம் என்ன? ஏற்கனவே பெத்த பாசத்தை நம்பிக்கை துரோகம் போட்டு சாகடிச்ச வெறுப்பில இருக்கிற குடும்பத்துக்கு, என்ன பண்ணப்போறோம்ன்றதே தெரியாத அளவுக்கு வெறியேறிடும்..

சாதிபேர சொல்லி, போனவங்களயும் தேடிப்புடிச்சி வாழவிடாம அழிச்சிபுட்டு, மிச்சம் இருக்கிற குடும்பத்தோட வாழ்க்கையையும் அழிச்சிபுட்டு. ஒரு ..யிறுக்கும் பிரயோசனம் இல்லாம நாசமா போய்டுவாங்க..செய்கூலிக்கு செமையா சேதாரம்.

இவங்களுக்கு என்ன சாதி காத்த செம்மல்னு சிலை வெக்கப்போறாங்களா, இல்ல மானம்காத்த மாவீரன்னு பள்ளிகூட பாட புஸ்தகத்துல பாடம் வெக்கறப்போறாங்களா? இவுனுங்க எந்த சமூகம் சமூகம்னு வீணா மதிப்பு குடுத்து பயப்படறானுங்களோ அதே சமூகத்துல உசுப்பேத்திவிட்டவனெல்லாம் பிரச்சினைன்னு ஆனதும், அவன்அவன் அவன் வேலையை பாக்கபூடுவானுங்கோ..

பொதுவா, சாதி, அந்தஸ்த்து பேதம்ன்னு தலைதூக்குறப்போ, கல்யாணத்துக்காக வீட்டைவிட்டு ஓடிப்போய்ட்டாங்களா..? எல்லாமே கைய மீறிப்போச்சா..? இந்த மாதிரி நேரத்துல வலியை மறந்துட்டு தீர்க்கமா டிசைட் பண்ண வேண்டியது மேற்படி குடும்பம் மட்டும்தான்..

எல்லாத்தையும் மறந்துட்டு வேணாம்னு ஒதறிவிட்டுட்டு போயிட்டாங்களா, ஓக்கே.. செத்தாலாவது பதினாறு நாள் பொறுத்திருந்து காரியம் செய்யணும். அவ்ளோ நாள்கூட காத்துகிடக்க தேவையில்லைன்னு முடிவெடுத்து, சனியன் ஒழிஞ்சதுன்னு ஒரு சொம்பு தண்ணிய தலைல ஊத்திகிட்டு அடுத்த வேலையை, அதாவது குடும்பத்துல உள்ள மத்தவங்களுக்காக வாழ ஆரம்பிச்சிடவேண்டியதுதான்.

ஓடிப்போனவங்கள தேடி அலையறதைவிட முட்டாள்தனம் எதுவுமில்லை.. ஒரு கல்யாணத்துக்காக ஒரு உயிரை துடிக்கத் துடிக்க கொல்றவன் மனித பிறப்புக்கே அருகதையில்லாதவன். கொடூரதுக்கு இன்னும் என்னென்ன வார்த்தைங்க இருக்கோ அத்தனையையும் போட்டு திட்டலாம்.

இயற்கை அவுங்களோட பியூச்சரை எப்படி கொண்டுபோகுதோ கொண்டுபோய்தொலையட்டும்னு சுத்தமா ஒதுங்கி போகவேண்டியதுதான்.

எதுக்கு சொல்லவர்றேன்னா, என் வீட்லயே இப்டியொன்னு ஆச்சு.. எல்லாமே கை மீறிப்போச்சு.. சட்டத்துக்கிட்டே போனா என்ன நடக்கும்னும் தெரியும்..சட்டத்துக்கு புறம்பா போனா என்ன நடக்கும்னும் தெரியும். அப்போ எனக்கே சின்ன வயசுன்னாலும் நானே தீர்மானிச்சேன் குடும்பத்துல இருந்த மத்தவங்க வாழ்க்கைதான் பெரிசா பட்டுச்சு.. எவன் பேச்சையும் கேக்கலை. தலையை முழுகனேன். ஆய் ஊய் கத்திகிட்டு  வந்தவன் கிட்டவெல்லாம் நான் ஒரே வரிதான் சொன்னேன். நானே தலையை முழுவிட்டேன். நீங்க ஏன் வீணா ஆடறீங்க. போய் உங்க குடும்பத்தை கவனிங்க..

நம்ம வீட்டு குடும்ப பிரச்சினையை நாமளே முடிவு பண்ணி தீர்க்காம  இன்னொருத்தன்கிட்ட கொண்டுபோறதே லூசுத்தனம். அப்போ எனக்கு தெரிஞ்ச ஒரே மந்திரம், எப்படிப்பட்ட காயத்தையும் ஆத்துற சக்தி காலத்துக்கு மட்டுமே உண்டுன்ற மந்திரம் மட்டுமே. காலம் எந்த சேதாரத்தையும் குடுக்காம ஆத்திடிச்சு.. நீர் அடிச்சி நீர் விலகறதுல்லன்ற மாதிரி, எந்த தவறுமே செய்யாத அடுத்த தலைமுறைகளின் வரவுகள் எல்லாத்தையும் மறக்கவெச்சிடிச்சி.

ஒலகத்துல பொறந்த எல்லாருக்குமே உணர்வு, உணர்ச்சி பார்வை எல்லாமே தனித்தனியாத்தான் இருக்கும்.

ஈருடல் ஓருயிர்னு சொல்ற புருஷன் பொண்டாட்டிக்கே பசி, கோபம், தாபம் எல்லாம் ஒரே மாதிரியாவா இருக்கு.. அதேமாதரிதான் பெத்த புள்ளைங்களுக்கு அவங்களுக்கு தனி உலகம், உணர்வு, உணர்ச்சி எல்லாமே..

நம்ம யோசிக்கிற மாதிரியேதான் பார்க்கிகிற மாதிரியேதான் பொண்டாட்டி புள்ளைங்களும் ஃபாலோ பண்ணணும்னு நெனைக்கிறது உலகத்துலயே பச்சை அயோக்கியனம். நீயும் ஒரு நாள் மேல போகப்போற.. அவங்களும் ஒரு நாள் மேலபோகப்போறாங்க.. இதுல யார் போய் யாரோட வாழ்க்கையை ஹண்ட்ரட் பர்சென்ட் டைரக்சன் குடுக்கறது?

லைஃபே ஒருபுரியாத புதிர்தான்.. ஜாதகம் பார்த்து சொந்தபந்தங்களே தெரண்டு கூடி வாழ்த்துற கல்யாணங்க நடக்குது.. ஆனா அதலயே சிலது டோட்டலா புட்டுகுது. நாடே ஆச்சர்யமா பாத்த பெரிய லீடர், பெரிய ஸ்டார் குடும்பங்கள்ல நடந்த மேரேஜ்லகூட இப்டியெல்லாம் நடக்கலையா?

ஓடிப்போய் கல்யாணம் கட்டிகிட்டு நாசமா பூடுவீங்கன்னு சாபம் வாங்கனவங்கள்லயும் பலபேருக்கு சகல சம்பத்துகளோடு ஓஹோன்னு வாழறமாதிரியும் வாழ்க்கை அமைஞ்சிடலயா?…

யார் வாழ்க்கை யாரால எப்படி போகும்னு யாராலயும் கணிக்கவேமுடியாது.. டிசைன் டிசைனா வாழ்க்கையில அளவுகோலை வெச்சிகிட்டு, விபரீதமே நடக்க கூடாதுன்னு எதிர்பார்க்கக்கூடாது. நடந்துட்டா அதை எப்படி ஹேண்டில் பண்றது..அப்டின்றதுலதான் சூட்சுமமே இருக்கு..

சுதந்திரத்துன்னு முன்னாடி, ஒரு நடிகை.. அவுங்களுக்கு ஒரு பெண் கொழந்தை.. அம்மாகூடவே குழந்தை நட்சத்திரம் நடிக்குது. வயசுக்கு வந்து ஹீரோயின் ஸ்டேஜ் வர்றப்போ, ஒரு டைரக்டரோட காதல்ல விழுந்து மேரேஜே ஆவுது. இதுல ஷாக்கான சமாச்சாரம் இன்னான்னா, ஹீரோயினுக்கு அம்மாவா நடிகை இருக்காங்க இல்ல..அவுங்களே, அந்த டைரக்டரைவிட வயசுல சின்னவங்கன.. மாமியாரைவிட மருமவன் வயசுல பெரியவன்..

ஒரு ஸ்டாரை வெச்சி அவர் டைரக்ட் பண்ண படம் பணத்தை அள்ளிக்கொட்டிச்சி. அந்த லாபத்துல படத்தோட பேர்லயே ஒரு பெரிய தியேட்டர்கட்ன வரலாறெல்லாம் உண்டு.

பெரிய அளவு வயசு வித்தியாசத்தோட கல்யாணம் கட்டிகிட்ட டைரக்டர் நல்லாத்தான் குடும்பம் நடத்தி அந்தம்மா பேரும் புகழோட இருக்கும்படி பார்த்துகிட்டாரு. அந்த அம்மாவும் பின்னாடி நெறைய கேரக்டர் ரோல்ஸ் பண்ணாங்க… டைரக்டர்-ஆக்ட்ரஸ் ஜோடிக்கு ஒரு பொம்பளை புள்ளை பொறந்து அதுவும் நடிகையாயி அத்தனை டாப் ஸ்டாரோடவும் ஜோடிபோட்டு கலக்குச்சி. அத்தோட இல்லாம பெஸ்ட் ஆக்டிங்குக்கு நேஷனல் அவார்டெல்லாம் வாங்கிச்சி. அவுங்களுக்கு ஒரு பொண்ணு பொறந்து அவுங்களும் நடிகையாகி கலக்குனாங்க.

நம்ம ஆட்டோ மாணிக்கம் லவ்வர எடுத்துக்குங்கோ, அந்தம்மா பொறந்த கொஞ்ச நாள்ல அப்பன் ஆத்தா டைவர்ஸ்.. குழந்தையை அப்பா வளக்க ஆரம்பிச்சாரு. டைவர்ஸ்ன்னதும் ரெண்டுபேரும் அவுங்களோட வாழ்க்கையை அப்படியே அம்போன்னு விட்டுடுல.. அவரு வேறொருத்திய கட்டி புது ஃபேமிலிமேனாகி மேலும் ரெண்டு பெத்துகிட்டாரு. அந்தம்மா இன்னொருத்தனை கட்டிக்கிட்டு அவுங்களும் மூணு பசங்கள பெத்துகிட்டாங்க.

அப்பாகூட வளர்ந்த பொண்ணு நடிகையாயி அரசியல்ல லீடராவும் ஆயிடிச்சி. எதிர்பக்கம் பொறந்த மூணு பசங்கள்ளல ஒரு பொண்ணும் நடிக்க ஆரம்பிச்சி அவ்ளோ பேரும் புகழோட இன்னைக்கு உலாவந்துகிட்டு இருக்காங்க.

வாழ்க்கையை முன்னோக்கி பாத்து வாழ ஆரம்பிச்சா எல்லாமே நல்லபடியாத்தான் போவும். அதைவிட்டு பின்னோக்கி பார்த்து வியாக்கியானம் பேசிகிட்டு இருந்தா சிக்கல்லயே குந்திக்கிட்டு கதறவேண்டியதுதான்.

யாரா இருந்தாலும் சரி, அவங்கவுங்க வாழ்க்கையை அவுங்கவுங்கதான் சொந்தமா வாழணும். அதே மாதிரி மத்தவங்களையும் வாழ விடணும்… புடிக்கலைன்னா ஒதுங்கிடணும். குறுக்கே பூந்து குரூர புத்தியெல்லாம் காட்டக்கூடாது அதான் நம்ம பாலிலி சார். வர்றேன் நாளைக்கு மார்னிங் பார்ப்போம் சார்.