பிரதமருக்கு கொலை மிரட்டல்: முன்னாள் கோவை குண்டு வெடிப்பு கைதி கைது?

சென்னை:

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுப்பது போன்ற ஆடியோ கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களி லும், வாட்ஸ்அப்பிலும் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

இந்நிலையில் அந்த ஆடியோவை பதிவிட்டதாக முன்னாள் குண்டு வெடிப்பு கைதி ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன

அந்த ஆடியோவில் வேறு ஒருவருடன் பேசிய முகமது ரபி என்பவர்,  தொழில் விசயமாக பேசும்போது, ஏற்கனவே  அத்வானியை  கொலை செய்ய குண்டு வைத்ததாகவும், அதன் காரணமாக  சிறை சென்றதாகவும் கூறினார். மேலும், பிரதமர் மோடியை கொலை செய்ய தன்னிடம் திட்டம் இருப்பதாவும் தெரிவித்தார்.

இந்த ஆடியோ வாட்ஸ்அப்பில் வைரலாக பரவியது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தியதில், இந்த ஆடியோவில் பேசியது கோவை கரும்புக்கடை சாரமேடு பகுதியை சேர்ந்தவர் 50 வயதான முகம்மது ரபிக் என்பது தெரிய வந்தது.

இவர் ஏற்கனவே கோவையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று திரும்பியவர் என்பதும், தற்போது  கோவையில் தொழில் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து முகமது ரபிக் மீது கொலை மிரட்டல் மற்றும் இறையாண்மைக்கு பங்கம் விளைவிப்பது போன்ற பிரிவுகளில் கீழ் கோவை குனியமுத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.