பான்மூன்ஜோம் :

லக நாடுகளை தனது அணுஆயுதங்கள் மூலம் மிரட்டி வந்த வடகொரிய அதிபர கிம் ஜோங், தென்கொரிய அதிபர் மூன் ஜோவை சந்தித்து பேசினார். 65 ஆண்டுகளுக்கு பிறகு இந்த  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

அணு குண்டை வீசி தென் கொரியாவை அழித்துவிடப் போவதாக மிரட்டி வந்த வட கொரியா முதன் முதலாக நட்புக்கரம் நீட்டியுள்ளது. இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் மிரட்டி வந்த நிலையில், தற்போதைய சந்திப்பு உலக நாடுகளிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரியா போர் முடிந்து 65 ஆண்டுகள் ஆன பின் முதன்முறையாக, வடகொரிய அதிபராக உள்ள கிம் ஜோங் உன், தென் கொரியா வந்துள்ளார். வடகொரிய அதிபரை எல்லை பகுதிக்கு நேரில் சென்று வரவேற்றார் தென்கொரிய அதிபர்.  இரு நாட்டு தலைவர்கள் கைகுலுக்கி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

இதையடுத்து,  இன்று புதிய அத்தியாயம் பிறக்கிறது என்றும் கிம் ஜோங் தெரிவித்தார்.  அதைத் தொடர்ந்து வடகொரிய அதிபருக்கு தென்கொரியா சார்பில் ராணுவ வீரர்கள் அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது.

இன்று தென்கொரியாவில் இருநாடுகள் இடையிலான உச்சி மாநாடு இன்று நடைபெறுகிறது. அதில்,  அணு ஆயுதமற்ற நாடாக கொரியாவை மாற்றுவது குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் தென்கொரியாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வடகொரிய வீரர்கள் பங்கேற்றனர். அதை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே கொஞ்சம் கொஞ்சமாக வேறுபாடுகள் களையப்பட்டு சமாதான முயற்சி முன்னெடுக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்தே, இனி அணு ஆயுத சோதனை நடத்தப் போவதில்லை என்றறு வடகொரியா அதிபர் அதிரடியாக அறிவித்தார்.  இதையடுத்து இரு நாட்டு தலைவர்களும் இன்று சந்தித்து பேசி வருகின்றனர்.

கொரியா தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிராந்தியமாக்க வேண்டும் என்பதே இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய இலக்காக உள்ளது.

இதனையடுத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் – கிம் ஜோங் உன் சந்திப்பு மே மாதம் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.