சியோல்: தனது நெருங்கிய வட்டாரத்தில் ஏதேனும் துரோகிகள் இருக்கிறார்களா? என்பதைக் கண்டறியவே, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலைப் பற்றிய எதிர்மறையான தகவல்கள் கசியவிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது புகழ்பெற்ற ஸ்டாலின் பாணி ராஜதந்திரமாகும்.
சுமார் 3 வார காலமாக, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தன் சொந்த நாட்டு மக்கள் மற்றும் உலகின் பார்வையிலிருந்து மறைந்து போனார். அவருக்கு நடைபெற்ற இதய அறுவை சிகிச்சை தோல்வியடைந்த காரணத்தால், அவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில், அவர் இறந்துவிட்டதாகவும்கூட சில செய்திகள் தெரிவித்தன.
அவர் இறந்தால், அடுத்ததாக அதிகாரத்தைக் கைப்பற்றுவது அதிபர் தங்கையா? அல்லது மனைவியா? என்ற விவாதங்களும் எழுந்தன. ஆனால், இந்தத் தகவலை, தென்கொரியா, சீனா உள்ளிட்ட நாடுகள் நம்பவில்லை.
இந்நிலையில், திடீரென ஒரு உரத் தொழிற்சாலையை அதிபர் திறந்துவைக்கும் புகைப்படம் வெளியாகி, தகவல் பரப்பிய பலரையும் வாயடைக்க வைத்தது.
இப்படியான தகவல் பரப்பியவர்களில், வடகொரியாவிற்கான பிரிட்டன் துணைத் தூதராக இருந்தவரும், அங்கிருந்து பின்னர் தப்பி வந்தவருமான தயே யோங்-ஹோ என்பவரும் ஒருவர்.
தனது நெருங்கிய வட்டாரத்தில் உள்ளவர்களில் யார் துரோகிகள்? என்பதைக் கண்டறிவதற்கான, புகழ்பெற்ற ஸ்டாலின் பாணி ராஜதந்திரத்தைதான் தற்போது கிம் ஜாங் உன்னும் கடைப்பிடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
வடகொரிய அதிபர் குறித்த பரபரப்புகள் பொய்யானதால், தயே யோங்-ஹோ போன்றோரின் கருத்துக்கள் வருங்காலத்தில் நம்பகத்தன்மையை இழக்கும் என்று கூறப்படுகிறது.