எந்தவகை சூரிய கிரகணம் என்னென்ன தேதிகளில் – விபரங்கள் இதோ..!

புதுடெல்லி: வடஇந்தியாவில் முழுமையான வளைய சூரிய கிரகணம் ஜுன் 21ம் தேதியான இன்று தெரிந்த நிலையில், அந்த முழுமையான தரிசனத்தை தென்னிந்தியா பெற வேண்டுமெனில், 2031ம் ஆண்டுவரை காத்திருக்க வேண்டும். ஏனெனில், தென்னிந்தியாவில் பகுதியளவு கிரகணம் மட்டுமே தெரிந்தது.

கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதியன்று, தென்னிந்தியா ‘நெருப்பு வளைய’ தரிசனத்தைப் பெற்றது. அந்த நிகழ்வுக்கு 6 மாதம் கழித்து, வடஇந்தியா அந்த தரிசனத்தை இன்று பெற்றுள்ளது.

இதனையடுத்து, தென்னிந்தியாவில் அடுத்து முழுமையான நெருப்பு வளைய சூரிய கிரகணம், 2031ம் ஆண்டு மே 21ம் தேதிதான் தெரியும் என்று கூறப்பட்டுள்ளது.

அதற்கடுத்து, 2064ம் ஆண்டு பிப்ரிவரி 17ம் தேதியன்றும், அதற்கடுத்த முழுமையான நெருப்பு வளைய சூரிய கிரகணம் 2085ம் ஆண்டு ஜுன் 22ம் தேதியும் தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கடந்த 1980களின் துவக்கத்தில் பிறந்து, தென்னிந்தியாவில் வாழ்பவர்கள் தங்கள் வாழ்வில் அடுத்து 2031ம் ஆண்டு வரக்கூடிய சூரிய கிரகணத்தை மட்டுமே, உறுதியாக காண முடியும் என்று வேடிக்கையாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேசமயம், ஒட்டுமொத்த சூரிய கிரகணத்தின் தரிசனம், தென்னிந்தியாவில், 2070ம் ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி கிடைக்கப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.