சென்னை

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு ஓசூரில் ரூ.543 கோடி ஜிஎஸ்டி ஊழல் செய்த முக்கிய புள்ளி கைது செய்யப்பட்டுள்ளார்.

ஓசூரில் பல நிறுவனங்கள் ஜிஎஸ்டி உள்ளீட்டு வரியை திரும்ப பெற்று வந்தன. ஆனால் அந்த பரிமாற்றங்களில் அரசின் ஜிஎஸ்டி புலனாய்வுத் துறை சென்னை பிரிவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதை ஒட்டி அனைத்து ஆவணங்களும் கவனமாக பரிசீலிக்கப்பட்டன. மேலும் இந்த ஆவணங்கள் மூலம் வருமான வரி மோசடியும் நடந்துள்ளதாக மேலும் சந்தேகம் எழுந்தது.

அதை ஒட்டி நடந்த விசாரனையில் ரூ.543 கோடி ஜிஎஸ்டி ஊழல் வெளியாகி உள்ளது. இந்த ஊழலுக்கு பின்னணியில் உள்ள முக்கிய புள்ளி ஒருவரும் கைது செய்ய்ப்பட்டுள்ளார். அவர் தனது விசாரணையில் தெரிவித்தபடி பல போலிப் பெயர்களில் அவர் வங்கி கணக்கு மற்றும் ஆதார் கார்டுகளைப் பெற்றுள்ளார். அவற்றைக் கொண்டு பல நிறுவனங்களை நிறுவியதாக பொய் தகவல் அளித்து ஜிஎஸ்டி பதிவு எண் பெற்றுள்ளார்.

சென்னை முகவரியில் உள்ள இந்த நிறுவனங்கள் மூலம் ஓசூரில் பல நிறுவனங்களுக்கு பொருட்களை விற்றதாக போலி பில்களை அனுப்பி உள்ளார். அந்த நிறுவனங்கள் பொருட்கள் ஏதும் வாங்காமலே இதற்கான ஜிஎஸ்டி உள்ளீட்டு வரியை திரும்பப் பெற்றுள்ளன.

முதல் கட்ட விசாரணையில் மட்டும் ரூ.543 கோடி ஊழல் நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. விசாரணை மற்றும் சோதனைகள் தொடர்வதால் இது மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.