பஞ்சாப் அணியுடனான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணி நேற்று மீண்டும் தோல்வியை தழுவியது.

 

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் நேற்று மோதின. டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆக, பவுண்டரிகளை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம். இறுதி கட்டத்தில் அக்‌ஷர் பட்டேல் அதிரடி காட்டத் தொடங்கினார். அவர் 17 பந்துகளில் 38 ரன்கள் எடுக்க, கவுரவமான ஸ்கோரை எட்டியது பஞ்சாப் அணி. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது. பெங்களூரு தரப்பில் சவுத்ரி, சாஹல் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

 

அடுத்து 139 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணி, ஆரம்பத்திலேயே தள்ளாடியது.டாப் பேட்ஸ்மேன்களான கிறிஸ் கெய்ல் 0, கேப்டன் விராட் கோலி 6 , டிவில்லியர்ஸ் 10 , கேதர் ஜாதவ் 6 , வாட்சன் 3 என வரிசையாக நடையை கட்ட, மன்தீப்சிங் மட்டும் 40 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். மேக்ஸ்வெல்லின் பந்து வீச்சில் அவர் கிளன் போல்டு ஆனதும் பெங்களூரு அணியின் நம்பிக்கையும் பொத்தென்று விழுந்துவிட்டது. 19 ஓவர்களில் அந்த அணி 119 ரன்களில் ஆல்-அவுட். இதன் மூலம் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. பஞ்சாப் தரப்பில் சந்தீப் ஷர்மா, அக்‌ஷர் பட்டேல் தலா 3 விக்கெட்டுகளும், மொகித் ஷர்மா, மேக்ஸ்வெல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

 

10 ஆட்டத்தில் விளையாடியுள்ள பஞ்சாப்புக்கு இது 5-வது வெற்றி. இதன் மூலம் அடுத்த சுற்று வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளது பஞ்சாப்.