கேள்விகளை முதல்வரிடம் கேளுங்கள் : கிரண் பேடி

புதுச்சேரி

புதுச்சேரி மாநிலத்தில் ஒரு நிகழ்வில் மாணவிகள் கேள்வி கேட்டதற்கு அந்த கேள்விகளை முதல்வரிடம் கேட்குமாறு அளுநர் கிரண் பேடி கூறி உள்ளார்.

புதுச்சேரி மாநில ஆளுநர் கிரண் பேடிக்கும் முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே பனிப்போர் தொடர்ந்து வருகிறது.   சட்டப்பேரவை உறுப்பினர் நியமனத்தின் போது ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையே மோதல் வலுத்தது.   இருவரும் ஒருவரை ஒருவர் அறிக்கையின் மூலம் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர்.     இதனால் புதுச்சேரியில் தொடர்ந்து பரபரப்பு உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் முன்பு ஹெல்மெட் அணிவது கட்டாயம் என சட்டம் இயற்றப்பட்டது.   அதன் பிறகு ஹெல்மெட் அணிவது அவரவர் விருப்பம் என அரசு அறிவித்தது.    நேற்று ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து ஆளுநர் கிரண் பேடி தலைமையில் மாணவ மாணவிகள்  பேரணி நடந்தது.    இந்த பேரணியில் மாணவிகளுடன் ஆளுநர் கிரண் பேடி ஹெல்மெட் அணிந்து சைக்கிளில் சென்றார்.

அந்த பேரணிக்கு பிறகு நடந்த நிகழ்வில் ஒரு மாணவி, “ஹெல்மெட் அணிவதால் உயிரிழப்பு தடுக்கப்படும்.  இவ்வாறு இருக்கையில் அரசு ஏன் இந்த சட்டத்தை தளர்த்தி உள்ளது?” என கேள்வி எழுப்பினர்.   அதற்கு ஆளுனர் கிரண் பேடி, “மாணவிகளாகிய நீங்கள் ஹெல்மெட்டுடன் சென்று முதல்வரை சந்தியுங்கள்.   அவரிடம் இந்த கேள்விகளை கேளுங்கள்” என பதில் அளித்துள்ளார்.   புதுச்சேரி அரசியலில் இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.