”ஆட்டுக்குத் தாடியும், மாநிலத்துக்கு கவர்னரும் தேவையா” என்பது திராவிட இயக்க தலைவர்கள் அக்காலத்தில் எழுப்பிய அதிரடி கேள்வி.  அதாவது மத்திய அமைச்சரின் பிரதிநிதியாக மாநிலத்தில் நியமிக்கப்படும் ஆளுநர் பதவி தேவையில்லை என்கிற அர்த்தத்தில் அப்படிச் சொல்வார்கள்.
ஆனால், பாண்டிச்சேரி ஆளுநர் கிரண்பேடி, தாடியாக அல்ல.. தலையாகவே செயல்படுகிறார் என்று ஆதங்கப்படுகிறார்கள் அம் மாநில அரசியல் நோக்கர்கள்.
இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியான ‪ கிரண்பேடி புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக கடந்த 29ம் தேதி பொறுப்பேற்றார். அன்றைய தினத்திலிருந்தே அவர் பிறப்பிக்கும் அதிரடி உத்தரவுகள் அனைத்தும் அரசு அதிகாரிகள் மட்டுமல்லாமல் அரசியல்வாதிகளையும் கதி கலங்கச் செய்து வருகிறது.
images (1)
அவரது போட்டுள்ள அதிரடி உத்தரவுகளில் சிலவற்றைப் பார்ப்போம்.
👍அனைத்து அரசு ஊழியர்களும் காலை 9 மணிக்கு அலுவலகத்திற்கு வந்துவிட வேண்டும்.
👍மாலை 5 மணி முதல் 6 மணி வரை பொதுமக்கள், அதிகாரிகளை சந்தித்து குறைகளைக் கேட்க வேண்டும்.  அந்த நேரத்தில் எந்தவித அலுவலக மீட்டிங்குகளும் இருக்கக் கூடாது.
👍சமூகவிரோத செயல்கள், ரவுடித் தொல்லை குறித்து 1031 என்ற இலவச எண்ணில் தெரிவிக்கலாம்.
👍புகார்கள் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாகவே வைக்கப்படும்.
புகார் அளிப்போர் யார் என்பது ஆளுநர், தலைமை செயலர், காவல்துறை தலைவர் ஆகியோருக்கு மட்டுமே தெரியும்.
👍அளிக்கும் தகவல் உண்மையாக இருந்தால் அவர்களுக்கு உரிய வெகுமதியும் அளிக்கப்படும்.
👍மக்கள் தாங்கள் வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் ரசீதை கேட்டுப் பெற வேண்டும்.
👍ஒரு வாரத்திற்குள் வணிகர்கள் தங்களது கணக்குகளை சரியாக்கி விடுங்கள்.
👍பள்ளிகளில் செயலர்கள், இயக்குநர்கள் திடீர் சோதனை நடத்துவார்கள். ஆசிரியர்கள் பணியில் உள்ளனரா என்பதை கண்டறிய இச்சோதனை.
👍ஊழல் செய்தால் யாராக இருந்தாலும் பணி நீக்கம் செய்யப்படுவார்கள்.
👍ஒரு வாரத்திற்குள் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.
👍தடை செய்யப்பட்ட இடங்களை வாகனங்களை நிறுத்தினால் போக்குவரத்து போலீசார் அகற்றுவார்கள்.
👍போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு சம்பவ இடத்திலேயே உடனடி அபராதம் வசூலிக்கப்படும்.
👍எந்த வி.ஐ.பி.க்களுக்காகவும் போக்குவரத்து நிறுத்தப்படாது. அவர்களின் வாகனங்களில் சைரனும் இருக்காது.
👍இருசக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும்.
👍புதுச்சேரி மக்களின் ஒவ்வொரு ரூபாயும் முறையாக செலவிடப்படும்.
–  “ஒரு முதல்வர் உத்தரவிட வேண்டியதெல்லாம் ஆளுனர் சொல்கிறாரே… புதுவையில் ஆளுனர் ஆட்சியா நடக்கிறது” என்று கேட்கிறீர்களா..?
உண்மையில் அங்கு எப்போதுமே ஆளுனர் ஆட்சிதான். அதாவது புதுச்சேரி  முழுமையாக மாநில அந்தஸ்து பெறவில்லை.யூனியன் பிரதேசம்தான். ஆகவே அங்கு துணைநிலை கவர்னர்தான் நியமிக்கப்படுவார். அவருக்குத்தான் அதிக அதிகாரம்.
ஆனால் பெரும்பாலும் ஆளுனர்கள், தங்களது அதிகாரித்தை காட்டாமல் முதல்வருடன் அனுசரித்து போய்விடுவார்கள். கடந்த கால ரங்கசாமி ஆட்சியில் வழக்கத்துக்கு மாறா, ஆளுநர் தனது அதிகாரத்தை நிலை நாட்ட முயல, உடனே டில்லிக்கு ஓடிச்சென்று ஆளுநரை மாற்ற வைத்தார் ரங்கசாமி.
சரி, இப்போது அப்படி நடக்குமா…?
அதற்கு முன்பு, கிரன்பேடியின் இன்னும் சில அதிரடிகளை பார்த்துவிடுவோம்.
“தூய்மையான புதுச்சேரி என்ற இலக்கை அடைய வார இறுதிநாட்களில் சிறப்பு துப்புரவு பணி மேற்கொள்ளப்படும்” என்று அறிவித்தார் கிரண்பேடி.
புதுச்சேரி சட்டக்கல்லூரி-ஆம்பூர் சாலையில் தூய்மைப் பணியை அவர்  தொடங்கி வைத்தார். இதில் அவரது செயலர் தேவநீதிதாஸ், காவல்துறை தலைவர் பிரவீர் ரஞ்சன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்றார்கள்.
இதெல்லாம் நல்லதுதான். ஆனால் இப்போதுதான் பாண்டிச்சேரியில் சட்டசபை தேர்தல் முடிந்து, அடுத்த ஆட்சி பொறுப்பேற்றிருக்கிறது. கொஞ்சம் பொறுத்து, புதிய ஆட்சியாளர்களை கலந்தாலோசித்து கிரண்பேடி செயல்படலாமே. அப்போதுதானே மக்களாட்சி என்பதற்கு அர்த்தம் இருக்கும் என்பதுதான் அரசியல் நோக்கர்களின் கருத்து.
ஆனால் கிரண்பேடியை உணர்ந்தவர்கள், அப்படியெல்லாம் அவர் நடந்துகொள்ளமாட்டார் என்கிறார்கள்.
“இந்திய  பிரதமராக இருந்த இந்திராகாந்தியின் வாகனம் என்று தெரிந்தும், சிறு தயக்கமும் இன்றி, அதை கிரேனில் கட்டி  இழுத்துச் சென்றவர் கிரண்பேடி.   எத்தனையோ மூத்த வல்துறை உயர் அதிகாரிகளே பணிக்குச் செல்லத்  தயங்கிய திஹார் சிறைச் சாலைக்கு பொறுப்பேற்று பல சீர்திருத்தங்களை அதிரடியாக செய்தவர் என்பதை மறுப்பதற்கில்லை.
ஆனால் கிரண்பேடி ஒன் மேன் ஆர்மியாக செயல்பட விரும்புபவர். மற்றவர்களுடன் இணைந்து செயல்பட விரும்பமாட்டார்” என்கிறார்கள்  அவரை அறிந்தவர்கள்.
அதிகாரியாக இருந்தாலே, கூட்டு முயற்சியில்தான் திட்டங்களை செயல்படுத்த வேண்டும், அப்போதுதான் திட்டமும் சிறப்பாக நிறைவடையும். ஆனால் இப்போது அரசின் முக்கிய பொறுப்பில் இருக்கும் கிரண்பேடி, ஒன்மேன் ஆர்மியாக செயல்படலாமா என்பதே கேள்வி.
தவிர, “இங்குள்ள சூழல் அவருக்குத்தெரியவில்லை. தெரிந்து கொள்ளவும் அவர் முயலவில்லை” என்கிற குற்றச்சாட்டும் அவர் மீது எழுந்திருக்கிறது..
‘புதுவையில் ஆக்கிரமிப்பாளர்கள்  தாங்களாகவே, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அதற்கு ஒரு வார காலம் அவகாசம் அளிக்கப்படும்’ என்று கிரண்பேடி அறிவித்தார். ஆனால் மறு நாளே, சாலையோர வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முனைந்தார்கள் அதிகாரிகள்.
download
ஆனால்   புதுவையின் பிரதான சாலையான  அண்ணா சாலையில் ஆக்கிரமிப்பு செய்திருக்கும் பெரிய வியாபார நிறுவனங்களையோ, நகரின் முக்கிய  கழிவுநீர் வாய்க்காலையே ஆக்கிரமித்திருக்கும் பெரும் புள்ளிகளையோ அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இது குறித்து கிரண்பேடிக்கும் தெரியவில்லை.
சமீபத்தில் புதுவை கம்பன் கலையரங்கத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கிரண்பேடி, ‘புதுவை மாநிலத்தில் பெண்களுக்கு  பாலியல் ரீதியான பிரச்னைகள் இருக்கிறதா?’ என்று கேட்டபோது பொதுமக்கள் ஆச்சரியப்பட்டுப்போனார்கள்.
ஒட்டுமொத்த தேசத்தையோ அதிர்ச்சி அடைய வைத்தது அரவிந்தர் ஆசிரம சகோதரிகளின் தற்கொலை. அதே போல ஆசிட் வீச்சால் பலியான காரைக்கால் வினோதினி விவகாரம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது.  அதே காரைக்காலைச் சேர்ந்த சிறுமி பாலியல் பாலாத்காரம்  செய்யப்பட்டதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.
இதெல்லாம் கிரண்பேடிக்கு தெரியவில்லை.
ஆனால் அதிகாரித்தை மட்டும் தனது கையில் எடுத்துக்கொள்ள ஆசைப்படுகிறார்.
தவிர,  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கலந்தாலோசிக்காமல் அவர்
ஆக,  “தலையாக” இருக்க ஆசைப்படுகிறார் கிரண்பேடி. அது எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்… புதிய முதல்வர் நாராயணசாமி கட்சிக்குள்ளேயே பலவித எதிர்ப்புகளை சமாளித்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில் கிரண்பேடியும் சேர்ந்தால் தாககுப்பிடிப்பாரா என்பதுதான்  புதுவை மக்களின் கேள்வி.
நாராயணசாமியின் ஆதரவாளர்களோ,  “நாராயணசாமி, அரசியலில் பழுத்த அனுபவம் கொண்டவர். எம்.பி., மத்திய அமைச்சர் என்று பல பதவிகளை வகித்தவர். அதோடு, கடந்த தேர்தலில் போட்டியிடாமலேயே முதல்வர் பதவியைக் கைப்பற்றியவருக்கு, கிரண்பேடியை சமாளிக்கத்தெரியாதா” என்கிறார்கள்.
– பாண்டி ராஜா