புதுவைக்குட்பட்ட ஏனாமில் உள்ள ஒரு தீவை தனியாருக்கு விற்க முயல்வதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கூறியதற்கு, அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுதினம் திங்கட்கிழமை நடைபெற உள்ளது. இங்கு திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் முதலமைச்சர் நாராயணசாமிக்கு தனது நெல்லித்தோப்பு தொகுதியை விட்டுக்கொடுத்த ஜான்குமாரும், அதிமுக கூட்டணியில் என்.ஆர் காங்கிரஸ் சார்பில் தொழிலதிபர் புவனேஸ்வரனும் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து நேற்று முன்தினம் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் காமராஜ் நகர் தொகுதிகுட்பட்ட நான்கு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, கிரண்பேடி புதுச்சேரிக்கு பச்சை துரோகம் செய்வதாகவும், தமிழகத்தில் பாஜக நேரடியாக ஆட்சி செய்வது போல, புதுவையில் கிரண்பேடி மூலம் மறைமுகமாக ஆட்சி செய்வதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், புதுவைக்குட்பட்ட ஏனாம் பிராந்தியத்தில் உள்ள தீவு ஒன்றை, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபருக்கு கிரண்பேடி விற்க முற்சிற்த்து வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதற்கு வாட்ஸாப் மூலம் செய்தியாளர்களுக்கு பதில் அளித்துள்ள கிரண்பேடி, “தவறான கருத்துகளை வெளியிடும் முன் திமுக தலைவர் ஸ்டாலின், எதைப் பாதுகாக்கிறார் என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்வது அவசியம். பொய்யான தகவல்களை கூறுவது உங்களுக்கு பொருந்தக்கூடியது அல்ல ஸ்டாலின். ஏனாமில் அதிகாரிகளால் சுற்றுச்சூழல் மீறல்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால் அரசு ஊழியர்கள் ஓய்வூதியத்தை இழப்பார்கள்.

ஏனாமில் சுற்றுலாத்துறை திட்டத்தில் தீவு எண் 5ல் சுற்றுச்சூழல் விதிகள் மீறப்பட்டுள்ளதுடன், ரூ. 5 கோடியை சுற்றுலா என்கிற பெயரிலும் புதுவை இழந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.