புதுச்சேரி:

கிரண்பேடி அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி கொள்வது வாடிக்கையாகிவிட்டது. தற்போது இந்துத்வா கொள்கை க்கு ஆதரவாக கருத்து தெரிவித்து சிக்கியுள்ளார். துணை நிலை ஆளுநர் பொறுப்பில் இருக்கும் அவரது இத்தகைய செயல்பாட்டிற்கு கண்டங்கள் எழுந்துள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு டெல்லி முதல்வர் வேட்பாளராக கிரண்பேடியை அறிவித்து பாஜ தேர்தலை சந்தித்தது. இதனால் கிரண்பேடி பிரபலமானார். டிவி பேட்டிகளில் அவரது முகத்தை அடிக்கடி பார்க்க முடிந்தது. பிரதமர் மோடியின் சாதனைகளை கூறி அவர் பிரச்சாரம் செய்தார். அவரது பிரச்சார மேடைகள் வேடிக்கை களமாக மாறியது. அவரது குறைபாடுகளை மக்கள் புறம்தள்ளி தேர்தலில் தோற்கடித்தனர். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அவர் டெல்லியில் வழக்கமாக பாஜ வெற்றி பெறும் கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிட்டு ஆம்ஆத்மி வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார்.

இதன் பிறகு அவருக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை பரிசாக வழங்கி பாஜ கவுரவித்தது. அவர் நீண்ட கால பாஜ ஆதரவாளராக இல்லாதபோதும் அரசியலமைப்பு பதவி அவருக்கு வழங்கப்பட்டது. இந்த பதவியில் அவர் அரசியல் சார்ந்து செயல்பட கூடாது. ஆனால் தற்போது அவர் பாஜவுக்கு வாக்குகள் கேட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

அதில், ‘‘ டெல்லியை காப்பாற்றுங்கள், டெல்லி தற்போது மிகுந்த கவலையில் இருக்கிறது. இது தொடரக் கூடாது. டெல்லி நெருக்கடியில் உள்ளது. டெல்லி அரசு செயல்படாமல் சண்டையிட்டு கொண்டிருக்கிறது. அதனால் அதை பணியாற்றுவோர் கைகளில் வழங்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

டெல்லி உள்ளாட்சி தேர்தலுக்கு பாஜ வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையை சுட்டிக்காட்டி இந்த கருத்து க்களை கிரண்பேடி தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக பாஜ தான் உள்ளாட்சி அமைப்புகளை இய க்கி கொண்டிருக்கிறது என்பதை கிரண்பேடி மறந்துவிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.

பாஜ நியமித்த கவனர்களில் இவ்வாறு பேசுவது கிரண்பேடி மட்டுமல்ல, ஏற்கனவே திரிபுரா கவர்னர் தத்தகத்த ராய் இந்துத்வா ஆதரவு கருத்துக்களை தெரிவித்து சர்ச்சையை கிளப்பியவர். அவர் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர் என்பதை பல நிகழ்வுகளில் வெளிப்படுத்தியுள்ளார். அவர் கவர்னர் பதவி ஏற்ற பிறகும் மதம் சார்ந்த வெறுக்கத்தக்க பதிவுகளை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

உச்சகட்டமாக ‘‘நாட்டில் மத நிலவரங்கள் பதற்றமான சூழ்நிலையில் உள்ளது. சிறுபான்மையினர், தலித்கள் மீது தாக்குதல் நடக்கிறது. இது அதிகரிப்பதை ஏற்க முடியாது’’ என்று சட்டமன்ற கவர்னர் உரையில் இடம்பெற்ற வாசகங்களை அவர் வாசிக்க மறுப்பு தெரிவித்தார். ராயின் இது போன்ற செயல்பாடுகள் அரசியல் வட்டாரத்திலும், மீடியாக்களிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அவரை கவர்னர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.