சென்னை:  தமிழகத்தில் பிரதமரின் கிசான் நிதி திட்டத்தில் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் போலி பயனர்கள் முடக்கப் பட்டுள்ளநிலையில், சேலம், திருவாரூர் மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கானோர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
பிரதமரின் நிதி உதவி திட்டமான பிரதான் மந்திரி கிஷான் யோஜனா திட்டத்தன் கீழ், ஏழை-எளிய விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தொகை தலா ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணைகளாக சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் வேளாண்மை துறை மூலம் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தில் போலியான பயனர்களை சேர்த்து, கோடிக்கணக்கில் முறைகேடு நடைபெற்று உள்ளதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து, வேளாண்துறை செயலாளர், அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு, முறைகேடு குறித்து ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அதன்படி, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கரூர், திருச்ச உள்பட பல மாவட்டங்களில்  பல்லாயிரம் போலி பயனர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டு, கோடிக்கணக்கான ரூபாய் வசூலிக்கப்பட்டு உள்ளது.
சேலம் மாவட்டம்:
சேலம் மாவட்டத்திலும் முறைகேடு நடைபெற்றுள்ளது விசாரணையில் தெரியவந்து உள்ளது. ஆத்தூர் வேளாண்மைத்துறை சார்பில் ஆத்தூர் ஒன்றியத்தில் சுமார் 600 பேரை போலியாக இத்திட்டத்தில் சேர்த்து மோசடியில் ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த முறைகேட்டில், ஆத்தூர் வேளாண்மைத்துறை அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரியும் ராஜா என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து, அவரை பணி இடைநீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

சேலம் மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்து 700 பேர் விவசாயிகள் என்ற போர்வையில் முறை கேடாக பதிவு செய்து மோசடியில் ஈடுபட்டு இருப்பதாகவும், இவர்களில்  5பேர் வெளி மாவட்டங் களைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய வேளாண்மைத்துறை அலுவல கங்களில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த மாபெரும் மோசடி தொடர்பாக, 10 ஆயிரத்து 700 பேரின் வங்கி கணக்குகளை அதிகாரிகள் முடக்கி உள்ளனர். அந்த கணக்குகளில் அரசு செலுத்திய பணத்தை திரும்ப பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. புகாரின் பேரில்  51 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து சேலம் சி.பி.சி.ஐ.டி.  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாரமங்கலம் வட்டாரத்தில் 2 தனியார் கணினி மையங்களில் 160 பயனாளிகள் பெயரை போலி ஆவணம் இணைத்து பதிவேற்றம் செய்த ராகுல், கலையரசன் ஆகிய 2 பேரை நேற்று முன்தினம் இரவு சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே, சேலம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் இளங்கோவன், திருச்சி பாசன மேலாண் பயிற்சி நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

இதுகுறித்து  செய்தியாளர்களிடம் பேசிய சேலம் மாவட்ட கலெக்டர்   ராமன், விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக  10 ஆயிரத்து 700 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு இருப்பதாகவும், ரூ.4 கோடி வரை மோசடி நடந்ததாக தெரிய வந்துள்ளதாகவும், முறைகேடாக பயனாளிகளாக சேர்ந்தவர்களிடம் இருந்து தற்போது வரை ரூ.1 கோடியே 20 லட்சம் திரும்ப பெறப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டம்:

திருவாரூர் மாவட்டத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தில் ரூ.15.40 லட்சம் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. விவசாயிகள் அல்லாத 375 பேர் பதிவு செய்து ரூ.2,000, ரூ.4,000 பெற்று முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து வேளாண்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.