விஜயநகரம்:

ஆந்திர மாநிலம் அரக்கு மக்களவை தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் தந்தையும், காங்கிரஸ் கட்சி சார்பில் மகளும் போட்டியிடுகின்றனர்.


ஆந்திர மாநிலம் அரக்கு மக்களவை தொகுதி மலைவாழ் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியாகும்.

எம்பியாக இருந்த கிஷோர் சந்திர தியோ மலைவாழ் மக்களின் நம்பிக்கைக்குரியவராக திகழ்பவர்.
ஆந்திராவின் விஜயநகரம் மாவட்டம் குருபம் என்ற ஊரில் வசதிபடைத்த மலைவாழ் குடும்பத்தில் பிறந்தவர்.

பொருளாதாரத்தில் பட்டம் படித்த அவர், அரசியல் அறிவியலில் முதுநிலை பட்டம் பெற்றவர்.
கடந்த 1977-ம் ஆண்டு காங்கிரஸ் வேட்பாளராக முதன்முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பின்னர், 1980,1984 மற்றும் 2004-ம் ஆண்டு தேர்தலில் இதே தொகுதியில் வெற்றி பெற்றார்.

கட்சி உடைந்தபோது, காங்கிரஸ்(எஸ்) கட்சியில் சேர்ந்தார். 1979-ம் ஆண்டு சரண்சிங் அமைச்சரவையில் எஃகு, கனிமம், நிலக்கரித் துறை இணை அமைச்சராக இருந்தார்.

மீண்டும் 1973-ம் ஆண்டு நரசிம்மராவின் அழைப்பை ஏற்று காங்கிரஸ் கட்சிக்கு திரும்பினார். 1994-ம் ஆண்டு ராஜ்யசபை எம்பியானார்.

கடந்த 20 ஆண்டுகளாக காங்கிரஸ் காரிய கமிட்டியில் உறுப்பினராக இருந்தார். பார்வதிபுரம் தொகுதியை பிரித்தபோது புதிதாக உதயமான அராக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களம் இறங்கி வெற்றிபெற்றார்.

2011-ம் ஆண்டு மன்மோகன்சிங் அமைச்சரவையில் பழங்குடியினத்தவர் விவகாரம் மற்றும் பஞ்சாயத்துராஜ்  அமைச்சரானார்.

எனினும் கடந்த 2014-ம் ஆண்டு அரக்கு தொகுதியில் போட்டியிட்ட தியோ தோல்வியடைந்தார்.
இதன்பின்னர் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட அதிருப்தியால் விலகி, தெலுங்கு தேசத்தில் சேர்ந்தார்.

தற்போது அரக்கு தொகுதியில் தெலுங்கு தேசம் வேட்பாளராக களம் இறங்கும் தியோவை எதிர்த்து, அவரது மகள் ஸ்ருதி தேவியை காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அறிவித்துள்ளது.
டெல்லியில் வழக்கறிஞராக இருக்கும் ஸ்ருதி தேவி கடந்த 1998-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். தொடர்ந்து தந்தையின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்.

மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் கனிமங்களை எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்களை நடத்தியுள்ளார் ஸ்ருதி தேவி.

6 முறை எம்பியாக தேர்வு செய்யப்பட்ட தன் தந்தையை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளராக ஸ்ருதி தேவி போட்டியிடுவதால், அரக்கு தொகுதி கவனத்தை ஈர்த்துள்ளது.