விக்ரம் சேத் எழுதிய நாவலை அடிப்படையாக கொண்டு ‘’ எ சூட்டபிள் பாய்’’ என்ற தொடர், நெட் பிளிக்ஸில்’ ஒளி பரப்பாகி வருகிறது.
அண்மையில் ஒளி பரப்பான இந்த தொடரில், இந்துப்பெண்ணை, முஸ்லிம் இளைஞர், கோயில் வளாகத்தில் வைத்து முத்தமிடும் காட்சி இடம் பெற்றது.
மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள மகேஷ்வர் கோயிலில் இந்த காட்சி படமாக்கப்பட்டுள்ளது.


இந்த முத்தக்காட்சி, இந்து மதத்தவரின் மனதை புண் படுத்தும் வகையில் உள்ளதாக மத்தியபிரதேச மாநிலம் மேவா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் பா.ஜ.க-வினர் புகார் அளித்தனர்.
இதனால் ’நெட்பிளிக்ஸ்’ நிறுவன அலுவலர்கள் இருவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ‘’எ சூட்டபிள் பாய்’’ தொடரில் இடம் பெறும் முத்தக்காட்சி கோயிலில் படமாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது குறித்து இந்தி நடிகை ஸ்வரா பாஸ்கர் , தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
‘’ 2018 ஆம் ஆண்டு ஜம்மு- காஷ்மீர் மாநிலம் கதுவாவில் 8 வயது சிறுமி, ஒரு ஆலயத்தில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாள். அப்போது ரத்தம் கொதிக்காதவர்களுக்கு , கோயிலில் முத்தக்கட்சி படமாக்கப்பட்டது குற்றமாக தெரிகிறதா?’’ என கேள்வி எழுப்பியுள்ளார்.
’’கோயிலில் பலாத்காரம் நடந்த போது, அமைதியாக இருந்தவர்களுக்கு கோயிலில் முத்தக்காட்சி படமாக்கப்பட்டதை எதிர்ப்பதற்கு எந்த உரிமையும் இல்லை’’ என்றும் நடிகை ஸ்வரா பாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

-பா.பாரதி.