சிட்னி: ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் நின்று சமாளிக்கும் வகையில், டென்னிஸ் பந்துகளை வீசச் செய்து, புல்ஷாட் அடித்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் இந்திய அணியின் கேஎல் ராகுல்.

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவர் கேஎல் ராகுல். தனக்கு எந்தப் பணியை இட்டாலும், முகம் சுழிக்காமல் முடிந்தளவு சிறப்பாக செய்துமுடிப்பவர் கேஎல் ராகுல். சமீப காலங்களில், டி-20 போட்டிகளில் நிபுணத்துவம் பெற்று மிளிர்கிறார்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்காக இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார் ராகுல். ஐபிஎல் தொடருக்காக, அமீரகத்தில் தட்டையான ஆடுகளங்களில் அனைத்து பேட்ஸ்மென்களும் ஆடினர்.

ஆனால், ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் வேறுமாதிரியானவை. பந்துகள் எகிறிவரும் மற்றும் வேகமாக வரும். வேகப்பந்து வீச்சுக்கு பெரியளவில் ஒத்துழைக்கும் ஆஸ்திரேலிய ஆடுகளங்கள்.

எனவே, சிட்னியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த கேஎல் ராகுல், டென்னிஸ் பந்துகளை தலைக்கு மேலாக வீசச் செய்து, அதை புல் ஷாட் அடிக்கும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதேசமயம், புல் ஷாட்டை மேல்நோக்கி அடிக்காமல், கீழே அடித்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

ஆஸ்திரேலிய சுற்றுப் பயணம் மேற்கொள்ள வேண்டுமானால், சில விசேடப் பயிற்சிகள் தேவை. கடந்த 1980கள் மற்றும் 1990களில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் செய்த இந்திய அணியினர், இத்தகையப் பயற்சிகளை மேற்கொண்டனர்.