சென்னை: மருத்துவப் படிப்பின் மீது ஆர்வமுள்ள, தேர்ந்தெடுக்கப்பட்ட, 12ம் வகுப்பை நிறைவுசெய்த பள்ளி மாணாக்கர்களுக்கு, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மாணாக்கர்கள் பயிற்சியளிக்கிறார்கள்.

சென்னை சேத்துப்பட்டிலுள்ள எம்.சி.சி. மேல்நிலைப் பள்ளியில், கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் உண்டு உறைவிட முறையில், இப்பயிற்சி நடைபெறுகிறது. கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியின் முதலாம் மற்றும் இரண்டாமாண்டு மாணாக்கர்கள், இந்தப் பயிற்சியை வழங்கி வருகிறார்கள்.

பயிற்சிபெறும் மாணாக்கர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள். அவர்களின் மொத்த எண்ணிக்கை 86.

ஒவ்வொரு மாணாக்கருக்கும் ஒரு மருத்துவக் கல்லூரி மாணாக்கரின் தனிப்பட்ட அலைபேசி எண் வழங்கப்பட்டு, அவர்கள் எந்த நேரத்திலும் சந்தேகம் கேட்க அழைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பயிற்சியளிக்கும் மருத்துவக் கல்லூரி மாணாக்கர்கள், நீட் தேர்வு தேறியவர்கள். இந்தப் பயிற்சியில் கலந்துகொள்ளும் மாணாக்கர்கள், மதிப்பெண்கள் மற்றும் நுழைவுத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.

கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியின் பழைய மாணாக்கர் சங்கத்தினரால், இந்த யோசனை முன்வைக்கப்பட்டு, பள்ளிக் கல்வித் துறையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

காலை 8.30 மணிக்கு தொடங்கும் பயிற்சி, சில இடைவேளைகளுடன், மாலை 7.30 மணிவரை நீள்கிறது.

– மதுரை மாயாண்டி