டில்லி,

திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சரான  கே.என். நேரு மீதான சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக அரசின் மேல்முறையீடு காரணமாக, தமிழக முன்னாள் அமைச்சரும் திமுக மூத்த தலை வருமான கே.என். நேரு மீதான சொத்துக் குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க லஞ்ச ஒழிப்பு மற்றும் தடுப்புப் பிரிவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த திமுக ஆட்சியின்போது  கே.என். நேரு போக்குவரத்துத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.  அப் போது வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக,  தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் தடுப்புப் பிரிவு திருச்சி தனி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையிலும் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றது.

இதையடுத்து உச்சநீதி மன்ற நீதிபதிகள்  அளித்த தீர்ப்பு விவரம் வருமாறு,

இந்த வழக்கு தொடர்புடைய குற்றத்தின் தீவிரத்தைப் புலனாய்வு அமைப்பு கருத்தில் கொள்ள வேண்டும். ஊழலுக்கு எதிரான சட்டத்தின் நோக்கங்களை மனதில் வைத்து, அவற்றின் விசாரணையை நடத்த வேண்டும்.  விசாரணை அறிக்கையை கூடுமான வரையில் விரைந்து சமர்ப்பிக்க வேண்டும். எனவே, இந்த வழக்கு விசாரணையிலிருந்து குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுவிப்பது தொடர்பான உத்தரவு நிறுத்தி வைக்கப்படுகிறது.

சட்டப்படி இந்த வழக்கு விசாரணையை, விசாரணை நீதிமன்றம் முன்னெடுத்துச் செல்லும் வகையில், புலானாய்வு அமைப்பு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது.

இந்த வழக்கின் தகுதிகள் குறித்து நீதிமன்றம் எந்தக் கருத்தையும் தெரிவிக்க விரும்பிவில்லை என்பது தெளிவுப்படுத்தப்படுகிறது.

இவ்வாறு தீர்ப்பில் கூறி உள்ளனர்.