கொடநாடு எஸ்டேட் தொடர்பான வீடியோ வெளியான விவகாரம்: காவல்துறை வழக்கு பதிவு

சென்னை:

ஜெயலலிதாவின் கொட நாடு எஸ்டேட் கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக தெஹல்கா இணைய பத்திகையின் முன்னாள் ஆசிரியர் வெளியிட்டுள்ள வீடியோ வில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், சென்னை காவல் துறை இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளது.

தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல்

ஜெ. மறைவை தொடர்ந்து, அவரது கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற மர்மக் கொலைகளின் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது குறித்த திடுக்கிடும் தகவல்களை தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

அதில்,  ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, கொடநாடு எஸ்டேட்டில், காவலாளிகளை கட்டிப்போட்டு, கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். அதில் காவலாளி பகதூர் பலியானார். இந்த கொள்ளையில் ஈடுபட்ட ஷயான் என்பவரின் மனைவி, குழந்தை, உட்பட 5 பேர் மர்மமாக உயிரிழந்தனர். இதன்பிறகு ஜெயலலிதாவின் கார் டிரைவர், கனகராஜும் விபத்தில் கொல்லப்பட்டார். 5 பேர் சாவு என்பது திட்டமிட்ட கொலை என்பதும், கனகராஜ் கொலையும் சந்தேகத்திற்கிடமானது என்றும் இந்த விவகாரத்தில்,  ஜெயலலிதா எவ்வாறு தனது கட்டுப்பாட்டுக்குள் கட்சியினரை வைத்திருந்தாரோ அதேபோல கட்டுப்பாட்டுக்குள் வைக்க விரும்பிய ‘முக்கிய பிரமுகர்தான்’ இந்த ஆவணங்களை எடுக்க உத்தரவிட்டு இருந்ததாகவும் தெரிவித்தார்.

இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,   கொடநாடு எஸ்டேட் கொலை கொள்ளை சம்பவத்திற்கும் எனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.

தவறான செய்தி வெளியிட்டவர்கள் மீதும், அதற்கு பின்புலத்தில் இருப்ப வர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றவர்,  அரசியலில் நேரடியாக எதிர்கொள்ள முடியாதவர்கள் குறுக்கு வழியை கையாள்கிறார்கள், இதுகுறித்து காவல்நிலையத் தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியிருந்தார்.

இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த திவாகரன், இந்த விஷயத்தில் டிடிவி தினகரன் மவுனம் காப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், வீடியோவில் குறிப்பிட்டுள்ள முக்கிய பிரமுகர் எடப்பாடி பழனிச்சாமியா, டிடிவி தினகரனா என்ற விவாதமும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக  தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

கொடநாடு வீடியோவை ஆதாரமாகவும், அதை  வெளியிட்ட பத்திரிகையாளர்களிட மும் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.