கொடநாடு கொலை வழக்கு: மனோஜ், சயனை கைது செய்ய உதகை நீதிமன்றம் அதிரடி உத்தரவு

உதகை:

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றவாளிகளான மனோஜ், சயான் ஆகியோரின் ஜாமின் மனுவை உதகை நீதி மன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது  .

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த  2017 ம் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அதை தடுத்த காவலாளி  ஓம் பகதூர் கொல்லப் பட்டார்.  இந்த வழக்கில் சயன், மனோஜ், திபு, ஜிதின்ஜாய், ஜம்சீர்அலி, சந்தோஷ்சாமி, உதயகுமார், சதீசன், வாளையார் மனோஜ், பிஜின்குட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் பல்வேறு யூகங்களை ஏற்படுத்திய நிலையில், ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் கனகராஜ் சேலம் அருகே ஒரு கார் விபத்தில் மரணம் அடைந்தார்.

இந்த நிலையில், கடந்த கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக தெகல்கா இணையதளத்தின் முன்னாள்  ஆசிரியர் மேத்யு சாமுவேல் என்பவர் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், இந்த சம்பவம் தொடர்பாக முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சயன், மனோஜ் இருவரையும் தமிழக காவல்துறையினர் டில்லியில் கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினார். அப்போது, அவர்களை கைது செய்வதற்கான ஆவனங்களை கேட்ட மாஜிஸ்திரேட் சரிதா, அதற்கு சரியான ஆவனங்களால் இல்லாததால், அவர்கள் இருவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முதலமைச்சரை தொடர்புபடுத்தி பேட்டி அளித்த மனோஜ், சயன் மீது அரசுத் தரப்பில் மற்றொரு வழக்கும் தொடரப்பட்ட நிலையில் இரண்டு வழக்குகளும் இன்று உதகை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன.

அப்போது ஜம்சீர்அலி, சதீசன், உதயகுமார், சந்தோஷ், மனோஜ், ஜிதின்ஜாய் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், சயன், வாளையார் மனோஜ், பிஜின், திபு ஆகியோர் ஆஜராகவில்லை.

இதையடுத்து அவர்களது ஜாமீன் மனுவை ரத்து செய்த நீதிபதி வடமலை அவர்களுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published.