சென்னை:

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட சயான், மனோஜ் ஆகியோர் தங்களது ஜாமின் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அவர்களது மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற  கொலை கொள்ளை சம்பவங்களில் முதல்வர் பழனிசாமிக்கு தொடர்பிருப்பதாக தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் இரு மாதங்களுக்கு முன்பு ஆவணப்படம் வெளி யிட்டிருந்தார். அதில் பேசியிருந்த கொடநாடு வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமினில் இருந்த   மனோஜ், சயான் ஆகியோர் முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தலின் அடிப்படையிலேயே கொலை, கொள்ளையில் ஈடுபட்டதாக தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, அவர்கள் மீதான ஜாமின் மனுவை ரத்து செய்யக்கோரி உதகை நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, அவர்களின் ஜாமின் மனுவை  கடந்த பிப்ரவரி 8ந்தேதி ரத்து செய்து உத்தரவிட்டது.

அதையடுத்து, உதகை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி இருவரும் சென்னை உயர் நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் மீதான கடந்த  விசாரணையின்போது, கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களுக்கும், மத்திய குற்றப்பிரிவு பதிவு செய்த வழக்கிற்கும் தொடர்பில்லை என்ற பொய்யான தகவலை சொல்லியே உதகை நீதிமன்றத்தில் ஜாமினை ரத்து செய்யக்கோரி காவல்துறை மனுத்தாக்கல் செய்ததாக குற்றம் சாட்டி இருந்தார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து  காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன், இவர்கள் இருவர் மீதும் பல வழக்குகள் கேரள நீதிமன்றத்தில் நிலுவை யில் உள்ளது, இந்த வீடியோவை வெளியிட்டு பிளாக்மெயில் செய்யவும், வழக்குகளை நீர்த்துபோக செய்ய இருவரும் முயற்சிப்பதாக தெரிவித்திருந்தார்.  அதைத்தொடர்ந்து வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், சயன் மற்றும் மனோஜ் ஆகியோரின் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி ஜி.கே.இளந்திரையன்  இன்று  உத்தரவிட்டார்.