கொடநாடு விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது! உச்சநீதி மன்றம்

டில்லி:

கொட நாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக  சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது என்று டிராபிக் ராமசாமியின் மனுவை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்தது.

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சமூக ஆர்வலரான  டிராபிக் ராமசாமி உச்சநீதி மன்றத்தில்  மனுதாக்கல் செய்திருந்தார். அவர் சார்பாக  தேமுதிக வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி உச்சநீதி மன்றத்தில் மனுவை தாக்கல் செய்திருந்தார். மனுவில்,  கொடநாடு கொலை, கொள்ளையில் தமிழக முதல்வர் எடப்பாடிக்கும் தொடர்பு உள்ளதால், இது தொடர்பாக சிபிஐ விசா ரணைக்கு உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளார்.

கொடநாடு கொலை கொள்ளை தொடர்பாக  தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மாத்யூ சாமுவேல் டில்லியில் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், கொடநாடு கொள்ளை குற்றவாளியான  சயன் அளித்துள்ள வீடியோ வாக்குமூலத்தில், இந்தச் சம்பவங்களின் பின்னணியில் முக்கிய நபர் இருப்பதாக கூறியுள்ளார். இது தமிழக முதல்வர்எடப்பாடி பழனிச்சாமி என கூறப்படுகிறது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், கொட நாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர வேண்டும் என்று சமூக ஆர்வலர் டிராபிக் சாமி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், டிராபிக் ராமசாமி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.