சச்சின் சாதனையை முறியடிப்பு: விராத் கோலியின் கிரிக்கெட் பயணத்தில் மற்றொரு சாதனை மைல் கல்..!

--

மான்செஸ்டர்:

கிரிகெட்டில், குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து சாதனைகள் செய்வதையே வேலையாக வைத்திருக்கும் கோலி, இன்று 11,000 ரன்களை விரைவாக கடந்த வீரர் என்ற மற்றொரு சாதனையையும் நிகழ்த்தினார்.

இதன்மூலம் சச்சின் டெண்டுல்கர் தன் வசம் வைத்திருந்த சாதனையை கோலி முறியடித்தார். இந்த சாதனையை நிகழ்த்த சச்சின் டெண்டுல்கர் 276 இன்னிங்ஸ்களை எடுத்துக் கொண்டார். ஆனால், விராத் கோலிக்கு தேவைப்பட்டதோ வெறும் 222 இன்னிங்ஸ்கள் மட்டுமே.

ஒருநாள் அரங்கில் மேலும் பல அம்சங்களில் சச்சினின் சாதனைகளை முறியடித்து வருகிறார் கோலி என்பது கவனிக்கத்தக்கது. இவர், ஒருநாள் போட்டிகளில் டெண்டுல்கரின் சத எண்ணிக்கையையும் முறியடிப்பார் என்று பரவலாக நம்பப்படுகிறது. தற்போது விராத் கோலிக்கு 30 வயது மட்டுமே ஆகிறது என்பதும் கவனிக்கத்தக்கது.

11,000 ரன்கள் என்ற சாதனையை எட்டியதில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். இவர் எடுத்துக்கொண்டது 286 இன்னிங்ஸ். இதே சாதனைக்கு நமது சவுரவ் கங்குலி எடுத்துக்கொண்டது 288 இன்னிங்ஸ்.

தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜாக்யுஸ் கல்லீஸ் எடுத்துக்கொண்டது 293 இன்னிங்ஸ் மற்றும் இலங்கையின் முன்னாள் வீரர் சங்ககாராவுக்கு தேவைப்பட்டது 318 இன்னிங்ஸ்.