கயானா: கடந்த சில மாதங்களாக சதமடிக்காமல் இருந்து, நேற்று மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக சதமடித்ததன் மூலம், இந்திய கேப்டன் விராத் கோலி சில சாதனைகளைச் செய்துள்ளார்.

நேற்றைய சதத்தின் மூலம் ஒருநாள் போட்டிகளில் கோலி அடிக்கும் 42வது சதமாகும் இது. இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் அடித்த 49 சதங்களே தற்போது உலக சாதனையாக இருந்து வருகிறது.

இன்னும் 7 சதங்கள் அடித்தால் கோலி அந்த சாதனையை சமன் செய்யலாம் மற்றும் 8 அடித்தால் அதை விஞ்சி மற்றொரு உலக சாதனை படைக்கலாம். கோலி அதை செய்வார் என்பதே பலரின் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு.

முன்னாள் வீரர்களின் சாதனைகள் முறியடிப்பு

இந்தப் போட்டியின் மூலம் முன்னாள் இந்தியக் கேப்டன் கங்குலி மற்றும் பாகிஸ்தானின் ஜாவேத் மியான்டட் ஆகியோரின் சாதனைகளையும் முறியடித்துள்ளார் கோலி.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் இதுவரை முதலிடத்தில் இருந்த பாகிஸ்தானின் ஜாவேத் மியான்டட்டை கோலி முந்தியுள்ளார். ஜாவித் 1930 ரன்கள் குவித்திருந்தார்.

மேலும், இந்திய அளவில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் கங்குலி இரண்டாமிடத்தில் இருந்தார். அவரின் எண்ணிக்கை 11363. ஆனால், தற்போது 11406 ரன்களை அடித்ததன் மூலம், டெண்டுல்கருக்கு அடுத்து இந்திய அணியில் அதிக ஒருநாள் போட்டி ரன்களை குவித்தவர்களின் கோலி இரண்டாமிடம் பெற்றுள்ளார்.