‍‍டெண்டுல்கரின் பெரும்பாலான சாதனைகளை விராத் கோலி முறியடிப்பார்: சேவாக்

புதுடெல்லி: ஒரேயொரு சாதனையைத் தவிர, சச்சின் டெண்டுல்கரின் பெருமளவு சாதனைகளை விராத் கோலி முறியடித்துவிடுவார் என்று கணித்துள்ளார் இந்திய முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் சேவாக்.

அதேசமயம், விராத் கோலியுடன் டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித்தை ஒப்பிட்டபோது, அதை மறுத்த சேவாக், ஸ்மித்தைவிட விராத் கோலி பல வகைகளில் சிறந்த வீரர் என்றும் கூறினார்.

அவர் கூறியுள்ளதாவது, “இந்த தலைமுறையின் சிறந்த வீரர் விராத் கோலி. இந்த நேரத்தின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் அவர்தான். அவர் சதமடிக்கும் விதம் மற்றும் ரன்களை சேர்க்கும் விதம் ஆகியவற்றின் அடிப்படையில் இதை சொல்கிறேன். அவர் டெண்டுல்கரின் பெரும்பாலான சாதனைகளை தகர்த்துவிடுவார் என்று உறுதியாக நம்புகிறேன்.

அதேசமயம், சச்சினின் 200 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள சாதனையை மட்டும் அவரால் முறியடிக்க முடியாது என்று நினைக்கிறேன். இந்த சாதனையை வேறு எவரும் செய்ய முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை” என்றார்.

சச்சின் டெண்டுல்கரின் 49 ஒருநாள் போட்டி சதங்கள் என்ற சாதனையை முறியடிக்க கோலிக்கு இன்னும் 7 சதங்களே தேவை. டெண்டுல்கரின் ஒட்டுமொத்த ஒருநாள் போட்டி சராசரி 44.83 ரன்கள். ஆனால், தற்போதைய நிலையில் கோலியின் ஒருநாள் போட்டி சராசரி 60.31 ரன்கள்.