கடந்த 2.5 ஆண்டுகளாக, ஒரு தொடர்ச்சியான ஒருநாள் அணி கேப்டனாக செயல்பட்டுவரும் விராத் கோலி, தான் தலைமையேற்ற 50 போட்டிகளில், மொத்தம் 35 போட்டிகளை வென்று, வெற்றிகரமான கேப்டன் என்ற பெயரைப் பெற்றாலும், ஒரு கேப்டன் என்ற முறையில் அவர் இன்னும் மேம்படுத்திக்கொள்ள வேண்டியுள்ளது என்ற கருத்தை கோலியின் முன்னாள் பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மா மறுத்துள்ளார்.

கடும் நெருக்கடியான நேரங்களில், அவர் முன்னாள் கேப்டன் தோனியை சார்ந்திருக்க வேண்டுமென்ற கருத்தையும் புறந்தள்ளிய அவர், “விராத் கோலிக்கு சிறு வயதிலிருந்தே அனைத்தையும் திட்டமிடும் திறமை உண்டு.

எனவே, அவர் இந்திய அணியை 2019 உலகக்கோப்பை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்வது உறுதி” என்று தெரிவித்துள்ளார். கோலியை இளம் வயதிலிருந்தே நன்கு அறிந்தவர் என்ற முறையில் அவர் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.

ஒரு பேட்ஸ்மேன் என்ற முறையில் மிகத் திறமையாக செயல்படும் விராத் கோலி, ஒரு கேப்டன் என்ற முறையில் இன்னும் சிறப்பாக தன் திறன்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டுமென்பதாக எழுந்த கருத்துக்களை அடுத்து இவ்வாறு கூறியுள்ளார் ராஜ்குமார் ஷர்மா.