தோனி ரன்அவுட்: கொல்கத்தா தீவிர ரசிகர் அதிர்ச்சியில் மரணம்

கொல்கத்தா:

லக கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில், நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தின்போது, இந்திய வீரர் தோனி ரன் அவுட் ஆனது அவரது ரசிகர்களிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், கொல்கத்தாவை சேர்ந்த தீவிர தோனி ரசிகர் ஒருவர், அதிர்ச்சியில்  மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி அரை இறுதி போட்டிக்கு தேர்வான நிலையில்,கடந்த 9ந்தேதி மற்றும் 19ந்தேதி நடைபெற்ற ஆட்டங்களில் நியூசிலாந்து அணியிடம்  18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த ஆட்டத்தின் தொடக்கத்திலேயே 3 விக்கெட்டுக்கள் வீழ்ந்த நிலையில், இந்திய ரசிகர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளான நிலையில், வழக்கமாக 4வது ஆட்டக்காரராக களமிறங்க வேண்டிய தோனி 7வது ஆட்டக்காரராக களமிறக்கப்பட்டார். இது அவரது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்திய நிலையில், இந்திய அணியின் தோல்வியில் இருந்து மீட்க தீவிரமாக விளையாடி வந்த தோனி, எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆக அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த ஆட்டத்தை தனது மொபைல் போன் மூலம் ரசித்து வந்த தோனியின் தீவிர ரசிகரான கொல்கத்தாவை சேர்ந்த சைக்கிள் கடை உரிமையாளர் ஸ்ரீகாந்த் மைதி என்ற 33 வயது இளைஞர், தோனி ரன் ஆவுட் ஆன அதிர்ச்சியில் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார். அதைக்கண்ட அருகில் இருந்தவர்கள் உடனே அருகிலுள்ள கால்குல் மருத்துவமனையில் அவரை சேர்த்துள்ளனர். ஆனால், அவர் உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தோனியின் அவுட் செய்தி கேட்ட அதிர்ச்சியில், மாரடைப்பு ஏற்பட்டு ஸ்ரீகாந்த் மைதி மரணம் அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.  இதன் காரணமாக அந்த பகுதியே சோகத்தில் மூழ்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கார்ட்டூன் கேலரி