பிளிப்கார்ட்டில் புகார் செய்தவருக்கு, பாஜ கட்சி உறுப்பினர் மெசேஜ்: கொல்கத்தாவில் பரபரப்பு

கொல்கத்தா:

பிரபல ஆன்லைன் நிறுவனமான பிலிப்கார்ட்டில் ஆர்டர் செய்தவருக்கு, அந்நிறுவனம் சார்பில் அனுப்பப்பட்ட ஒப்புதல் தகவலில், தாங்கள் பாஜ கட்சி உறுப்பினராக சேர்ந்துள்ளீர்கள் என்று தகவல் வந்துள்ளது. இதைக்கண்ட அந்த நபர் நாட்டுல என்னப்பா நடக்குது என அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவைச் சேர்ந்த ஒருவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர்  ஆன்லைன் நிறுவனமாக பிளிப்கார்டில்  ஹெட்போன் ஒன்று  ஆர்டர் செய்துள்ளார். ஆனால்,  அவருக்கு, ஹெட்போனுக்குப் பதில் எண்ணெய்ப் பாட்டில்தான் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்,  உடனே பிளிப் கார்ட் குறிப்பிட்டுள்ள கஸ்டமர் கேர் எண்ணான 1800266 1001 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேச முயற்சி செய்துள்ளார்.

ஆனால், போன் ஒரு ரிங்குடன் துண்டிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அடுத்த வினாடியோ அவரது மொபைல் போனுக்கு மெசேஜ் வந்துள்ளது. அதை திறந்து பார்க்க நபர் அதிர்ச்சிக்கு உள்ளானார்.

அதில், பா.ஜ.க-வில் இணைந்ததற்கு நன்றி என்று பா.ஜ.க உறுப்பினர் எண்ணும் அளிக்கப்பட்டு மெசேஜ் வந்துள்ளது. இதனால் குழப்பத்திற்கு ஆளான அந்த நபர், இதுகுறித்து தனது நண்பர்கள் வட்டத்தில் பேசி, அவர்களும் பிளிப் கார்ட்டின் டோல் பிரி எண்ணுக்கு அழைத்துள்ளனர். அவர்களுக்கும் பாஜ உறுப்பினர் என்ற குறும் தகவலே வந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள  மேற்கு வங்க பா.ஜ.க தலைவர் திலிப் கோஷ்,பிளிப்கார்ட் விவகாரத்துக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஆனால், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பிளிப்கார்ட், இந்த டோல்பிரி எண்ணை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே ஒப்படைத்து விட்டோம் என்றும், அப்போது பேக்கிங் செய்ய பயன்படுத்தப்பட்டி டேப்பில் அந்த எண்ணும் பிரிண்டு செய்யப்பட்டது. அது தற்போது பயன்படுத்தப்பட்டு உள்ளது என்று தெரிவித்து உள்ளது.