கொல்கத்தா,

கொல்கத்தாவின் மிகப்பெரிய ஜவுளி சந்தையான புரா பஜாரில் நேற்று நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

கொல்கத்தாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள புர்ராபஜார், நூல் மற்றும் ஜவுளி பொருட்களுக்கு பிரசித்தி பெற்ற சந்தையாகும்.  இங்கு அமர்தலா சந்து என்ற பகுதியில் ஒரு குடோனில் இருந்து தீ பரவியதாக கூறப்படுகிறது.

தீ மளமளவென அடுத்தடுத்த கடைகளுக்கும் பரவியது.  தீ விபத்து ஏற்பட்ட அமர்தலா சந்து பகுதி குறுகிய சந்து என்பதால் தீயை அணைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.  தீயணைப்பு வாகனம் உள்ளே வர முடியாமல் தீ அணைப்பதில் தாமதம் ஏற்பட்டது.  எனினும், சுமார் 30 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், கொளுந்துவிட்டு எரியும் நெருப்பின் வேகம் காரணமாக, தீயை கட்டுப்படுத்த முடியாமல் அவர்கள் திணறினர்.  பேரிடர் மேலாண்மைக் குழுவும் சம்பவ இடத்துக்கு விரைந்து தீ அணைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீ  விபத்து நேரிட்ட பகுதிக்கு அருகே உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் உட னடியாக அங்கிருந்து வெளியேற்றப் பட்டனர்.

மாநில அமைச்சர் சோவன் சட்டர்ஜி தீப்பற்றிய பகுதியை நேரில் சென்று பார்வையிட்டு தீ அணைக்கும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார்.