மேற்கு வங்க கலவரம் தொடர்பாக அமீத்ஷா மீது வழக்கு பதிவு: பாஜக தலைவர்கள் கைது

கொல்கத்தா:

கொல்கத்தா கலவரம் தொடர்பாக பாஜக தேசிய தலைவர் அமீத்ஷா மீது மேற்கு வங்க போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏராளமான பாஜக தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கடந்த செவ்வாய்க்கிழமை அமீத்ஷா பங்கேற்ற கூட்டத்தில் பாஜக மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலையடுத்து கலவரம் மூண்டது.

இந்த சம்பவத்தில், அமீத்ஷாவை போலீஸார் பாதுகாப்பாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இதனையடுத்து, இரு காவல் நிலையங்களில் அமீத்ஷா உட்பட பல்வேறு பாஜக தலைவர்கள் மீது வழக்கு பதியப்பட்டது.

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவினர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் நடவடிக்கை எடுத்தனர்.

மேற்கு வங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியின் உத்தரவின் பேரின் இரவோடு இரவாக பாஜகவினர் கைது செய்யப்பட்டதாக அக்கட்சியின் தலைவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்த கலவரத்தின்போது ஏராளமான மோட்டார் பைக்குகளுக்கு தீ வைக்கப்பட்டது.