மோடியை புறக்கணித்த கொல்கத்தா பிரெஸிடென்சி பல்கலைக்கழகம்

கொல்கத்தா:

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பிரெஸிடென்சி பல்கலைக்கழகத்தின் (முன்னாள் பிரெஸிடென்சி கல்லூரி) 200வது ஆண்டு விழா கொண்டாட்டம் வரும் ஜனவரி 20ம் தேதி தொடங்குகிறது.

பிரதமர் மோடி

இந்த விழாவில் கலந்து கொண்டு பேச முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது, இதில் இருவரும் கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்துவிட்டனர். இவர்கள் இருவரும் கலந்து கொண்டு இந்த வரலாற்று நிகழ்வில் பேசுகின்றனர். இருவரும் இப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் இல்லை. நோபல் பரிசு பெற்ற ரொனால்டு ரோஸ், அமர்தியா சென் ஆகியோர் இங்கு முன்னாள் மாணவர்கள் ஆவர்.

விஞ்ஞாணி சத்யன் போஸ், சுவாமி விவேகானந்தா, நடிகர் அசோக்குமார், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், சத்யஜித் ராய் போன்றவர்கள் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் முதல்வர்கள் ஜோதி பாசு, புத்ததேவ் பட்டாச்சாரியாவும் கூட இதன் முன்னாள் மாணவர்கள்.

1817ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கல்வி நிறுவனம் முதலில் ஹிந்து கல்லூரி, பின்னர் பிரெஸிடென்சி கல்லூரி, பின்னர் பிரெஸிடென்சி பல்கலைக்கழகம் என 3 முறை பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இங்கிருந்து வெளியேறி புகழ்பெற்ற பல பொருளாதார மேதைகள் சர்வதேச அளவிலான கவுரவங்களை பெற்றுள்ளனர்.

இத்தகைய பெருமை வாய்ந்த, சிறப்பு மிக்க, வரலாற்று முக்கியத்துவம் கொண்ட மிக்க ஒரு கல்வி நிறுவனம், அதன் 200வது ஆண்டு விழாவுக்கு நாட்டின் பிரதமர் நரேந்திரமோடியை அழைக்கவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது. இந்த கல்வி நிறுவனத்தின் மதசார்பின்மையை கருத்தில் கொண்டு மோடியை அழைக்கவில்லை என விழா ஏற்பாட்டாளர் குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.