Random image

கொல்கத்தா விமானநிலைய பார்கிங் பிரச்னைக்கு பெண்கள் மூலம் தீர்வு

கொல்கத்தா:

கொல்கத்தா விமானநிலையத்தில் இருந்து வெளியேறும் வாயிலில் வாகனங்களுக்கு பார்கிங் கட்டணம் வசூலிக்கும் மையம் உள்ளது. இந்த மையத்தில் ஆண் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதனால் வாகன ஓட்டிகளுக்கும், ஊழியர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது.

வாகன ஓட்டிகளை மிரட்டி கட்டணம் வசூலித்ததால் கலாட்டா நிறைந்து காணப்பட்டது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இது போல் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து 5 ஆண் ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். அதோடு கட்டண வசூல் மையமும் பல வாரங்களுக்கு மூடப்பட்டது. இந்நிலையில் இந்த பிரச்னைக்கு தீர்வு காண புது யுக்தி கையாளப்பட்டுள்ளது. கட்டண வசூல் மையத்தில் அனைத்து ஆண் ஊழியர்களையும் நீக்கிவிட்டு பெண்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் பகல் நேரத்தில் பணியில் இருப்பார்கள். வாகன ஓட்டிகளை எரிச்சல் படுத்தாமல் கட்டணம் வசூலிக்கும் முறையை இந்த பெண்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதோடு, வானக ஓட்டிகளும் பெண்களிடம் கட்டணத்துக்காக வாக்குவாதம் செய்வதை தவிர்க்கும் நிலையையும் காண முடிகிறது.