அபுதாபி: டெல்லி அணிக்கெதிரான போட்டியில், கொல்கத்தா அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியைப் பெற்றது.
டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவெடுத்தது டெல்லி அணி. இதனையடுத்து முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியில் துவக்க வீரர்களில் ஒருவரான நிதிஷி ரானா, 53 பந்துகளை சந்தித்து 1 சிக்ஸர் & 13 பவுண்டரிகளுடன் 81 ரன்களைக் குவித்தார்.
சுனில் நரைன் 32 பந்துகளைச் சந்தித்து 4 சிக்ஸர்கள் & 6 பவுண்டரிகளுடன் 64 ரன்களை விளாசினார். கேப்டன் மார்கன் 9 பந்துகளில் 17 ரன்களை அடித்தார். முடிவில், 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்களை சேர்த்தது அந்த அணி.
சற்று சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணியில் துவக்க ஜோடி சோபிக்கவில்லை. ஷிகர் தவான் வெறும் 6 ரன்களில் அவுட்டானார். துவக்க வீரர் ரஹானே டக்அவுட் ஆனார்.
கேப்டன் ஷ்ரேயாஸ் 38 பந்துகளில் 47 ரன்களை அடித்தார். அதுதான் அந்த அணியின் அதிகபட்ச ரன்கள். ரிஷப் பண்ட் 27 ரன்களையும், அஸ்வின் 14 ரன்களையுமே அடித்தனர். மற்ற யாரும் சோபிக்காத காரணத்தால் அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 135 ரன்களை மட்டுமே அடித்தது.