ஐஎஸ்எல் கால்பந்து தொடர் – கொல்கத்தா அணி சாம்பியன்..!

கோவா: ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில், சென்னையை வீழ்த்தி, மூன்றாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது கொல்கத்தா அணி.

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன சென்னை – கொல்கத்தா அணிகள். இரண்டு அணிகளுமே ஏற்கனவே 2 முறை சாம்பியன் பட்டத்தை வென்றவை. எனவே மூன்றாவது பட்டம் யாருக்கு என்ற கடுமையான நெருக்கடியில் இறுதியில் மோதின.

போட்டியின் 11வது நிமிடத்தில், கொல்கத்தா அணி கோல் அடிக்க, முதல் பாதி ஆட்டம் 1-0 என்ற கணக்கில் சென்னை அணிக்குப் பின்னடைவாக அமைந்தது.

பின்னர், இரண்டாவது பாதி ஆட்டத்தின் 3வது நிமிடத்தில் கொல்கத்தா மற்றொரு கோல் அடித்தது. பின்னர், 69வது நிமிடத்தில்தான் சென்னை அணிக்கு ஒரு கோல் கிடைத்தது.

ஆனாலும், சென்னை அணியால் முன்னிலை பெற முடியவில்லை. இந்நிலையில், ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் கொல்கத்தா அணி மற்றொரு கோல் அடித்து, 3-1 என்ற கணக்கில் போட்டியை வென்று, ஐஎஸ்எல் கோப்பையை மூன்றாவது முறையாக தட்டிச் சென்றது.

இந்தப் போட்டி வீரர்கள் யாரும் கைகுலுக்கிக் கொள்ளாமலும், பார்வையாளர்கள் யாரும் இல்லாமல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.