கொல்கத்தா

ரசு சார்பில் மேற்கு வங்கத்தில் செய்யப்படும் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான விளம்பரங்களுக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் தடை விதித்தது.

குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு நாடெங்கும் பல மாநிலங்களில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.   வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறும் போராட்டங்களில் பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளன.   உத்தரப் பிரதேச மாநிலத்தில் வன்முறையில் சுமார் 19 பேர் மரணம் அடைந்துள்ளனர்.   மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குடியுரிமை சட்டத்தை அமல் படுத்த மாட்டோம் என உறுதி அளித்துள்ளார்.

கொல்கத்தாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மூன்று முறை பேரணி நடத்தி உள்ளார்.  அத்துடன் குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு உள்ளிட்டவற்றை அமல்படுத்த மாட்டோம் என அரசு சார்பில் விளம்பரங்கள் அளித்து வருகிறது.   இதை எதிர்த்து ஆர்வலர்கள் பொது நல மனுக்களைக் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்களில், “மக்களின் வரிப்பணத்தை மேற்கு வங்க அரசு செலவு செய்து மத்திய அரசின் சட்டத்துக்கு எதிராகப் பிரசாரம் செய்து வருகிறது.   ஆனால் மாநிலத்தில் நடைபெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளில் அரசு கவனம் செலுத்தவில்லை.   மக்களின் வரிப்பணத்தில் செய்யப்படும் இந்த விளம்பரங்களை உடனடியாக நிறுத்த உத்தரவிட வேண்டும்” எனக் கோரிக்கை விடப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராதாகிருஷ்ணன் மற்றும் நீதிபதி அர்ஜித்  பானர்ஜி ஆகியோர் அமர்வில் விசாரிக்கப்பட்டது.   அப்போது அமர்வு “குடியுரிமைச் சட்டம் தொடர்பாகவும், அதற்கு எதிராகவும் மேற்கு வங்க அரசு செய்து வரும் அனைத்து விளம்பரங்களையும் உடனடியாக நிறுத்த வேண்டும். மறு உத்தரவு வரும்வரை விளம்பரம் ஏதும் அரசு சார்பில் செய்யக்கூடாது” என உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை வரும் மாதம் 9 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.