கொல்கத்தா

சிபிஐ இணை இயக்குநர் பங்கஜ் ஸ்ரீவத்சா வுக்கு விசாரணைக்கு ஆஜராக கொல்கத்தா காவல்துறை சம்மன் அனுப்பி உள்ளது/

சிபிஐ அமைப்புக்கும் மேற்கு வங்க காவல்துறைக்கும் இடையில் மோதல் நிலவி வருவது தெரிந்ததே. சமீபத்தில் சாரதா சிட்பண்ட் ஊழல் குறித்து கொல்கத்தா காவல்துறை ஆணையரிடம் விசாரிக்க வந்த சிபிஐ அதிகாரிகளை கொல்கத்தா காவல்துறையினர் கைது செய்து தடுத்தனர். சிபிஐக்கு எதிராக முதல்வர் மம்தா பானர்ஜி போராட்டம் நடத்தினார்.

தற்போது மேற்கு வங்க காவல்துறைக்கும் சிபிஐ அமைப்புக்கும் இடையே இன்னொரு மோதல் தொடங்கி உள்ளது.

சிபிஐ அமைப்பின் இணை இயக்குனர் பங்கஜ் ஸ்ரீவத்சா கிழக்கு பகுதி சிபிஐ அமைப்பின் தலைவர் ஆவார்.   தனக்கு தொடர்பு இல்லாத ஒரு வழக்கில் தன்னை கைது செய்த சிபிஐ கொடுமைப் படுத்தியதாக மேற்கு வங்கத்தை சேர்ந்த வைபவ் கட்டார் என்பவர் புகார் அளித்திருந்தார். அதை கொல்கத்தா நகரில் உள்ள பவானிபூர் காவல்நிலைய அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இந்த விசாரணை தொடர்பாக பவானிபூர் காவல்நிலைய அதிகாரிகள் சிபிஐ இணை இயக்குனர் பங்கஜ் ஸ்ரீவத்சாவை விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பி உள்ளனர். அந்த சம்மனில் இன்னும் 7 நாட்களுக்கும் பங்கஜ் ஸ்ரீவத்சா பவானிபூர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விசாரணைக்கு உட்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.