கொல்கத்தாவில் மீண்டும் மாடி பஸ்கள் அறிமுகம்

கொல்கத்தா

கொல்கத்தா நகரில் விரைவில் மீண்டும் மாடி பஸ்கள் ஓட உள்ளன.

கொல்கத்தா நகரில் மாடி பஸ்கள் என அழைக்கப்படும் இரண்டடுக்கு பேருந்துகள் கடந்த 1926 ஆம் வருடம் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது இந்த பேருந்தில் பயணம் செய்ய பலரும் விரும்பினார்கள். அதை ஒட்டி நகரில் பல இடங்களில் இந்த பேருந்து சேவை இயங்கத் தொடங்கின. ஆனால் காலப் போக்கில் இந்த பேருந்துகள் உற்பத்தி குறைந்தன.

அதை ஒட்டி கொல்கத்தா நகரில் இந்த இரண்டடுக்கு பேருந்துகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. இப்போது நகரில் எக்கோ பார்க் பகுதியில் ஒரே ஒரு பேருந்து மட்டும் இயங்கி வருகிறது. நகரில் பலரும் மீண்டும் இந்த இரண்டடுக்கு பேருந்து சேவை ஆரம்பிக்க வேண்டும் என விரும்பினர்.

அதை ஒட்டி தற்போதைய நிலைக்கு ஏற்ப வடிவமைக்கப் படும் புதிய இரண்டடுக்கு பேருந்துகளை சேவையில் அமர்த்த போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. இந்த பேருந்துகளில் சீட் பெல்டுக்கள், சிசிடிவி காமிராக்கள், தானியங்கி கதவுகள் மற்றும் தீயணைப்பு கருவிகள் பொருத்தப்பட உள்ளன. அத்துடன் இதில் ஐந்து பேருந்துகள் மட்டும் மேல் மாடி மூடியபடியும் மற்றவை திறந்தபடியும் அமைக்கப்பட உள்ளது.

இதில் திறந்த மாடி உள்ள பேருந்துகள் சுற்றுலாப் பயணிகளுக்காகவும் மற்றவை சாதாரண பயணிகளுக்காகவும் இயங்க உள்ளன. இந்த பேருந்துகள் இந்த வருடத்தின் பிற்பகுதியில் இயங்க உள்ளன. இந்த இரண்டடுக்கு பேருந்துகள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.