(பைல் படம்)

விழுப்புரம்:

விழுப்புரம்  கூத்தாண்டவர் கோவிவில் வருடாந்திர திருவிழா தொடங்கியது. இந்த விழாவில் கலந்துகொள்ள நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான  திருநங்கைகள் விழுப்புரத்தில் முகாமிட்டுள்ளனர்.

ஒவ்வொரு கோடை காலத்திலும் விழுப்புரம் மாவட்டம் கூவாகத்தில் உள்ள அரவாண் எனப்படும் கூத்தாண்டவர் கோவிலில்திருவிழா நடைபெறுவது வழக்கம். சித்திரை மாதத்தில் நடைபெறும் இந்த விழாவில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என திருநங்கைகள் ஆடிப்பாடி அசத்துவர். சுமார் ஒரு வார காலம் இந்த விழா நடைபெறும்.

உலகப் புகழ்பெற்ற இந்த  கூத்தாண்டவர் கோயில் சித்திரைப் பெருவிழா சாகைவார்த்தலுடன் நேற்று தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான  அரவான் கண்திறத்தல் வரும் மே 1ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த விழாவில் கலந்துகொள்ளும் திருநங்கைகள், கூத்தாண்டவர் எனப்படும் அரவாண் சுவாமியை  தங்களது கணவராக ஏற்றுக்கொண்டு  தாலி கட்டிக் கொள்வார்கள். பின்னர் அரவாண் களப்பலிக்கு பின்னர் திருநங்கைகள் அனைவரும் விதவை கோலம் ஏற்பது வழக்கம்.

அதன்படி இந்தாண்டுக்கான சித்திரை பெருவிழா தொடங்கி உள்ளது.  வரும் மே 1ந்தேதி அரவாண் கண் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அன்றைய தினத்தில், திருநங்கைகள் மணப்பெண் போல தங்களை அலங்கரித்து கொண்டு  தாலியை வாங்கி வந்து கோயில் முன் கூடுவர். பின்னர், கோயிலில் உள்ள பூசாரிகளின் கையால் அவர்கள் தாலி கட்டிக் கொள்வர்.

திருமணம் முடிந்ததும், அதன் மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில் இரவு முழுவதும் கோயிலில் கும்மியடித்து ஆடிப்பாடி மகிழ்வர். மறுநாள் 2ம் தேதி தேரோட்டமும், 3-ம் தேதி விடையார்த்தியும் நடைபெற உள்ளன. இறுதியில் மே4-ம் தேதி தர்மர் பட்டாபிஷேத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

இந்த விழாவில் கலந்துகொள்ள தமிழகம் மட்டுமல்லாது, மும்பை, டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து திருநங்கைகள் விழுப்புரத்தில் குவியத்தொடங்கி உள்ளனர்.